“மாணவன் மௌனமாக இருக்கும்போது நாம் எங்கே இருந்தோம்?” ஒரு உயிரை இழந்த பிறகு தேடாதீர்கள்; மௌனமாக இருக்கும்போதே கவனியுங்கள்!


























“ஒரு மாணவன் தனது பிரச்சினையை வெளிப்படையாகச் சொல்லவில்லை என்பதற்காக, அவனிடம் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கருதிவிட முடியாது. அவனது மௌனத்தையும் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களையும் கவனிப்பது நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும்” என கொழும்பு MIU பல்கலைக்கழகத்தின் உளவியல் துறைக்குப் பொறுப்பான சிரேஷ்ட விரிவுரையாளரும், உளசமூக ஆதரவு வலுவூட்டல் வளவாளரும், இலங்கை மனிதாபிமான மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினரும், உளசமூக ஆதரவு மையத்தின் இலங்கைக்கான இணைப்பாளருமான தேசபந்து கௌரவ கலாநிதி எஸ். பிரான்சிஸ் தெரிவித்தார்.மட்டக்களப்பு, கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயத்தில், அதிபர் திரு. சூசை பிரான்சிஸ் தலைமையில், பிரதி அதிபர் திரு. வேலாப்போடி லோகேஸ்வரன் அவர்களின் வழிநடத்தலில், உளவளத் துணைக்குப் பொறுப்பான ஆசிரியை திருமதி. ரோகினி பத்மராஜா அவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற தற்கொலைத் தடுப்பு தொடர்பான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வில் இன்று (14.9.2026)  உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த தேசபந்து கௌரவ கலாநிதி எஸ். பிரான்சிஸ், ஒருவர் தனது பிரச்சினையை வெளிப்படையாகச் சொல்லும்போதுதான் அவருக்கு உதவி தேவை என்பதை நாம் உணர வேண்டியதில்லை எனவும், அதற்கு முன்னரே அவரது நடத்தை, பேச்சு, சமூகத் தொடர்பு மற்றும் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களை அவதானிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், “அவன் சொல்லவில்லை… நான் கேட்கவில்லை…” என்ற நிலை உருவாகும் முன்பே, “அவன் ஏன் இவ்வாறு மௌனமாக இருக்கிறான்?” என்று சிந்திக்கும் பழக்கத்தை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

ஒரு மாணவன் கவலையில் இருப்பதை அறிந்தால், அவரைக் குற்றம் சாட்டுவதோ, கேலி செய்வதோ அல்லது அலட்சியப்படுத்துவதோ கூடாது. முதலில் அவரைக் கேட்பதும், புரிந்துகொள்வதும், தேவையானபோது நம்பகமான ஆசிரியர், பெற்றோர் அல்லது உரிய உதவியை வழங்கக்கூடிய நபருடன் இணைப்பதும் முக்கியமானதாகும் என தேசபந்து கௌரவ கலாநிதி எஸ். பிரான்சிஸ் மேலும் தெரிவித்தார்.

“தற்கொலைத் தடுப்பு என்பது தற்கொலை குறித்து மட்டும் பேசுவதல்ல. நம்மைச் சுற்றியுள்ளவர்களை கவனிப்பது, அவர்களின் மௌனத்தைக் கேட்பது, அவர்களின் பிரச்சினைகளை மதிப்பது மற்றும் தேவையான நேரத்தில் சரியான உதவியுடன் அவர்களை இணைப்பதும் தற்கொலைத் தடுப்பின் முக்கியமான பகுதிகளாகும்” என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த தேசபந்து கௌரவ கலாநிதி எஸ். பிரான்சிஸ், ஒரு குழந்தையின் பாதுகாப்பு என்பது பெற்றோரின் பொறுப்பு மட்டுமல்ல; ஆசிரியர்கள், பாடசாலை, அயலவர்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பாகும் எனத் தெரிவித்தார்.

“எங்கள் பிள்ளை எங்களோடு இருக்கும்போது – அது எங்கள் பிள்ளை;
பாடசாலைக்கு வரும்போது – அது உங்கள் பிள்ளை;
வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது – அது முழு சமூகத்தின் பிள்ளை.”

எனவே, “என் பிள்ளை – உன் பிள்ளை – நம் சமூகத்தின் பிள்ளை” என்ற பாதுகாப்பு உணர்வுடன் ஒவ்வொரு குழந்தையையும் பாதுகாக்கும் சமூகமாக நாம் உருவாக வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

பாடசாலை மாணவர்களின் மனநலத்தைப் பாதுகாப்பதில் ஆசிரியர்களுக்கு முக்கியமான பங்கு இருப்பதாகவும், மாணவர்களின் வழக்கமான நடத்தையில் ஏற்படும் மாற்றங்களை ஆரம்பத்திலேயே அவதானித்து, அவர்களுடன் அன்பாகவும் பொறுமையாகவும் உரையாடுவது அவசியம் எனவும் தேசபந்து கௌரவ கலாநிதி எஸ். பிரான்சிஸ் தெரிவித்தார்.

அதேவேளை, நண்பர் ஒருவர் வழக்கத்திற்கு மாறாக அமைதியாகவோ, தனிமையாகவோ அல்லது கவலையுடனோ இருப்பதை மாணவர்கள் அவதானித்தால், அவரை தனியாக விட்டுவிடாமல் நம்பகமான ஆசிரியர், பெற்றோர் அல்லது உரிய உதவியைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய பெரியவரிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில் சர்வதேச உளவியல் சார் கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளரும், உளசமூக ஆதரவு நிழல் மையத்தின் தலைவியும், சமூக ஆர்வலருமான திருமதி. தேவரஞ்சினி பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் உளசமூக சேவையாளர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

நிகழ்வின் நிறைவில், உளவளத் துணைக்குப் பொறுப்பான ஆசிரியை, சர்வதேச உளவியல் சார் கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர் மற்றும் உளசேவையாளர்களும் இணைந்து, மாணவர் நலன் கருதி எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.