மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்கும் கல்லடி உப்போடை – நொச்சிமுனைக்கும் பெருமை சேர்த்த ஆசிரியை கயல்விழி துரைராஜா!
இலங்கையின் கல்வித்துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தேசிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/மமே/இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலய ஆசிரியை திருமதி கயல்விழி துரைராஜா.
கல்விச் சேவையில் சிறந்து விளங்கும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் ‘குருபிரதீபா பிரபா – 2026’ தேசிய விருதை அவர் பெற்றுள்ளமை, மட்டக்களப்பு மேற்கு கல்விச் சமூகத்திற்கும் அவரது சொந்தப் பிரதேசமான நொச்சிமுனைக்கும் பெருமை சேர்த்துள்ளது.
நகர்ப்புற வசதிகளைத் தாண்டி, கிராமப்புற மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தையே தனது பணியின் மையமாகக் கொண்டு அவர் முன்னெடுத்து வரும் சேவைக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே இச்சாதனை பார்க்கப்படுகிறது.
இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தில் கடந்த 17 ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றி வரும் அவர், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு சவால்கள் நிறைந்த சூழலிலும் தனது கல்விப் பணியைத் தொய்வின்றி முன்னெடுத்து வருகிறார்.
நொச்சிமுனையில் அமைந்துள்ள தனது வதிவிடத்திலிருந்து பாடசாலைக்குச் செல்வதற்காக நாள்தோறும் சுமார் 64 கிலோமீற்றர் தூரம் பயணிக்கும் அவர், நீண்ட பயணத்தையும் அன்றாட இடர்பாடுகளையும் கடந்து மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக உழைத்து வருகிறார்.
பணியிட மாற்றம் மற்றும் வசதியான சேவைச் சூழல்களைத் தேடிச் செல்லும் வாய்ப்புகள் இருந்தபோதிலும், தான் முதன்முதலில் நியமனம் பெற்ற பாடசாலையிலேயே தொடர்ந்தும் சேவையாற்றி வருவது அவரது தொழில்சார் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
ஒரு ஆசிரியரின் பணி வகுப்பறைக் கற்பித்தலுடன் மட்டும் முடிவடைவதில்லை. தமது மாணவர்களின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்காகச் சவால்களை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து பணியாற்றுவதிலும் அந்தப் பணியின் உண்மையான அர்த்தம் வெளிப்படுகிறது. அந்த வகையில், ஆசிரியை கயல்விழி துரைராஜாவின் நீண்டகாலச் சேவை பாராட்டுக்குரியது.
அவரது அர்ப்பணிப்பான கல்விப் பணிக்குக் கிடைத்துள்ள இந்த தேசிய விருது, கிராமப்புறக் கல்வி வளர்ச்சிக்காக உழைக்கும் ஆசிரியர்களின் பங்களிப்பை நினைவூட்டும் முக்கிய அங்கீகாரமாகவும் அமைந்துள்ளது.
கல்விப் பணியைத் தியாக உணர்வுடன் முன்னெடுத்து, தேசிய மட்டத்தில் அங்கீகாரம் பெற்றுள்ள ஆசிரியை திருமதி கயல்விழி துரைராஜாவுக்கு BATTI MEDIA தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.







