வாழும் போதே வாழ்த்தி கௌரவிப்பு! – கிழக்கு பல்கலைக் கழக வேந்தர் S. மௌனகுரு தலைமையில் ஆரையூர் அருளுக்கு BATTI MEDIA வாழ்நாள் சாதனையாளர் விருது

 













 

 





 



















 EDITOR

 

ஆரையம்பதியின் மூத்த கலை, இலக்கிய ஆளுமை மூத்த தம்பி அருளம்பலத்தின் இல்லம் தேடிச் சென்று கௌரவிப்பு

மட்டக்களப்பு – ஆரையம்பதியைச் சேர்ந்த, ஆரையூர் அருள் என அழைக்கப்படும் மூத்த தம்பி அருளம்பலம் அவர்களின் வாழ்நாள் கலை, இலக்கிய மற்றும் சமூகப் பணிகளைக் கௌரவிக்கும் வகையில், BATTI MEDIA ஊடக நிறுவனத்தின் சார்பில் அவருக்கு “வாழ்நாள் சாதனையாளர்” கௌரவிப்பு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

வாழும் போதே சாதனையாளர்களைப் பாராட்டிக் கௌரவிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் எஸ். மௌனகுரு தலைமையில், மூத்த தம்பி அருளம்பலத்தின் இல்லத்தில் இடம்பெற்றது.

பெரிய மேடைகளில் பலருடன் இணைத்துப் பாராட்டுவதைக் கடந்து, சாதனையாளரின் இல்லம் தேடிச் சென்று அவரைக் கௌரவிப்பது அவரது வாழ்நாள் உழைப்புக்கு வழங்கப்படும் உண்மையான அங்கீகாரமாகும். இது சாதனையாளருக்கு உயர்ந்தபட்ச மரியாதையை வழங்குவதுடன், அவரது குடும்பத்தினருக்கும் அவர் வாழும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் ஒரு சிறப்பான அணுகுமுறையாகவும் அமைகின்றது.

மேலும், இவ்வாறான கௌரவிப்புகளை நேரில் காணும் சிறார்கள் மற்றும் இளைய தலைமுறையினர், தாமும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற ஊக்கத்தையும் உத்வேகத்தையும் பெற்றுக்கொள்கின்றனர். அந்த வகையில், கலை, இலக்கியம் மற்றும் சமூகப் பணிகளுக்காகத் தமது வாழ்நாளை அர்ப்பணித்த ஆளுமைகளை அவர்கள் வாழும் காலத்திலேயே தேடிச் சென்று கௌரவிப்பது பாராட்டத்தக்க பணியாகும்.

கிழக்கு மண்ணின் கலை, இலக்கியப் பொக்கிஷம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதியைச் சேர்ந்த மூத்த தம்பி அருளம்பலம், கிழக்கு மண்ணின் முதன்மைத் தமிழ் புலவராகவும், கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்காகத் தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த பன்முகக் கலைஞராகவும் ஆளுமையாளராகவும் திகழ்கின்றார்.

ஆசிரியர், அதிபர், எழுத்தாளர், அண்ணாவியார், நாடக ஆசிரியர், வளவாளர், சமாதான நீதிவான் எனப் பல்வேறு துறைகளில் தடம் பதித்துள்ள இவர், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், வில்லுப்பாட்டுகள், நாடகங்கள் உள்ளிட்ட 13,300-க்கும் மேற்பட்ட ஆக்கங்களைப் படைத்த இலக்கியப் படைப்பாளி ஆவார்.

வடமோடி நாட்டுக்கூத்து, தென்மோடி நாட்டுக்கூத்து, வசந்தன் கூத்து மற்றும் சமூகக் கூத்து போன்ற மரபுக் கலைவடிவங்களுக்கு உயிரூட்டி, அவற்றின் வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் தொடர்ச்சிக்கு அரும்பங்காற்றியுள்ளார். கிழக்கு மாகாணத்தின் பாரம்பரியக் கலை வடிவங்களைப் பேணிப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதில் இவரது கலைப்பணி தனித்துவம் மிக்கதாக விளங்குகின்றது.

தமது எழுத்துப்பணி, கலைப்பணி மற்றும் சமூகப்பணிகளுக்காக அரச மற்றும் அரச சாரா நிறுவனங்கள், கலைக்கழகங்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளினால் 200-க்கும் மேற்பட்ட விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார்.

மாவட்ட, மாகாண, தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் கலைச் செம்மல், கவியரசர், பல் கலைமாமணி, கலைமுத்து, பல்கலை வித்தகர், இலக்கிய வேந்தர், மரபுக்கலை மன்னன், இறைஞான தேசிகர், சமூக தீபம், இறைக்கவிமாமணி, செம்மொழிப் புலவர், கீர்த்திஸ்ரீ, கலைஞானி, கலாபூஷணம், கவிச்செம்மல், கலைத்தீபம், வில்லிசை வித்தகர், தேசியக் கலைஞர், தேனகதீபம், அறிவுப் பொக்கிஷம், கலையருவி, கலைப்பாவரசு, கவிஞானி, கலைமாமணி, முத்தமிழ் மாமணி உள்ளிட்ட பல்வேறு கௌரவப் பட்டங்களைப் பெற்றுள்ள இவர், கிழக்கு மண்ணின் கலை, இலக்கியப் பாரம்பரியத்தின் முக்கிய ஆளுமையாகத் திகழ்கின்றார்.

இல்லம் தேடிச் சென்று கௌரவித்த BATTI MEDIA

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணம், மட்டக்களப்பு அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் பேராசிரியர் திருமதி புளோரன்ஸ் பாரதி கென்னடி மற்றும் மூத்த தம்பி அருளம்பலத்துடன் பாடசாலையில் கல்வி பயின்ற ஓய்வுநிலை அதிபர் திருமதி அருட்சோதி ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

ஆரம்ப நிகழ்வாகச் சிறார்களின் கலை ஆற்றுகைகள் இடம்பெற்றன. தொடர்ந்து, கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் எஸ். மௌனகுரு அவர்களால் மூத்த தம்பி அருளம்பலத்திற்குப் பொன்னாடை போர்த்தப்பட்டு, BATTI MEDIA ஊடக நிறுவனத்தின் சார்பிலான “வாழ்நாள் சாதனையாளர்” நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, திரு. மற்றும் திருமதி அருட்சோதி தம்பதியினராலும் அவருக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவம் வழங்கப்பட்டது.

வாழும் போதே வாழ்த்திக் கௌரவிக்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையை முன்னிறுத்தி, மூத்த தம்பி அருளம்பலத்தின் இல்லம் தேடிச் சென்று இந்த அங்கீகாரத்தை வழங்கியமை, சாதனையாளர்களின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் மதிக்கும் ஒரு பாராட்டத்தக்க முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

கலைஞர்களையும் இலக்கிய ஆளுமைகளையும் அவர்கள் வாழும் காலத்திலேயே அடையாளம் கண்டு கௌரவிப்பதன் மூலம், அவர்களின் பணிகளைச் சமூகத்திற்கும் எதிர்காலத் தலைமுறையினருக்கும் அறிமுகப்படுத்த முடியும் என்பதற்கு இந்நிகழ்வு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது.

அர்ப்பணிப்பின் அடையாளம் • கலைப்பணியின் கௌரவம் • தலைமுறைகளுக்கான ஓர் அழியாத நினைவுச் சின்னம்.

இத்தகைய உயரிய நோக்கத்துடன் BATTI MEDIA முன்னெடுத்துள்ள இந்த வாழ்நாள் சாதனையாளர் கௌரவிப்பு முயற்சி, கிழக்கு மண்ணின் கலை, இலக்கிய ஆளுமைகளின் பங்களிப்புகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் அர்த்தமுள்ள பணியாகும்.