உங்கள் பெயரில் வாகன இலக்கத் தகடா? – இலங்கையில் புதிய யோசனை!

 

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள வழக்கமான வாகனப் பதிவு இலக்கங்களுக்குப் பதிலாக, தனிநபர்களின் பெயர்கள் அல்லது வணிக நிறுவனங்களின் பெயர்களைப் பொறித்த விசேட இலக்கத் தகடுகளை அறிமுகப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் அண்மையில் நடைபெற்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இந்த யோசனை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், வாகன உரிமையாளர்கள் தமது சொந்தப் பெயர் அல்லது வணிக நிறுவனத்தின் பெயரை உள்ளடக்கிய விசேட இலக்கத் தகடுகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படலாம்.

அதேவேளை, விசேட வாகனப் பதிவு இலக்கங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் அரசாங்கத்துக்கு மேலதிக வருமானத்தை ஈட்டுவதுடன், வாகன உரிமையாளர்களுக்கு அதிக தெரிவுகளை வழங்குவது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

எனினும், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் அதனுடன் தொடர்புடைய தொழில்நுட்ப, சட்ட மற்றும் பாதுகாப்பு அம்சங்களை விரிவாக மதிப்பீடு செய்ய வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் வாகனப் பதிவு முறையை நவீனமயப்படுத்துதல் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சேவைகளை மேம்படுத்துதல் ஆகிய பரந்த நோக்கங்களின் ஒரு பகுதியாகவே இந்த யோசனை தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.