2,819 பயிற்சி தாதியர்களுக்கு நவம்பர் முதலாம் திகதி நியமனம்! 76 தாதியர்களுக்குப் பதவி உயர்வு!

2020ஆம் ஆண்டு மாணவர் தாதியர் குழுவைச் சேர்ந்த 2,819 பயிற்சி தாதியர்களுக்கு, தரம் மூன்று தாதியர் உத்தியோகத்தர்களாக நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மூன்றாண்டு தாதியர் பயிற்சிப் பாடநெறியை நிறைவு செய்த இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படவுள்ளன.

அலரி மாளிகை வளாகத்தில் முற்பகல் நடைபெறவுள்ள இந்நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ளது. இதில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவும் கலந்துகொள்ளவுள்ளார்.

நியமனம் பெறும் தாதியர்கள் நாடளாவிய ரீதியில் மத்திய அரசு மற்றும் மாகாண சபைகளின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் பணிக்கமர்த்தப்படவுள்ளனர்.

இதன் மூலம் நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பில் நிலவும் தாதியர் மனிதவளத் தேவையை ஓரளவு நிவர்த்தி செய்வதுடன், வைத்தியசாலைகளில் தாதியர் சேவையை வலுப்படுத்தி மக்களுக்குத் தரமான சுகாதார சேவையை வழங்குவதற்கும் வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, தற்போது வைத்தியசாலைச் சேவையில் பணியாற்றிவரும் முதலாம் தரத்தைச் சேர்ந்த 76 தாதியர்களுக்கு, சிறப்புத் தர தாதியர் உத்தியோகத்தர்களாகப் பதவி உயர்வு வழங்குவதற்கான கடிதங்களும் இதன்போது கையளிக்கப்படவுள்ளன.