மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் ஆடைகளற்ற நிலையில் சடலம் கரையொதுங்கியது!

 







கல்லடி நாவலடி கடலாட்சி அம்மன் ஆலயத்திற்கு முன்பாகச் சம்பவம் – பொலிஸார் விசாரணை

மட்டக்களப்பு, கல்லடி நாவலடி கடலாட்சி அம்மன் ஆலயத்திற்கு முன்பாக உள்ள கடற்கரையில், ஆடைகளற்ற நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த சடலம் நடுத்தர வயதைச் சேர்ந்த ஒருவருடையதாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடற்கரையில் நின்ற மீனவர்கள் சடலத்தைக் கண்டு, சம்பவம் தொடர்பாகப் பிரதேச கிராம உத்தியோகத்தருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, கிராம உத்தியோகத்தர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், உயிரிழந்தவர் யார், அவர் எவ்வாறு உயிரிழந்தார், சடலம் அப்பகுதியைச் சேர்ந்தவருடையதா அல்லது வேறு இடத்திலிருந்து கடலில் அடித்துவரப்பட்டதா என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

இது தற்கொலையா, கொலையா அல்லது வேறு காரணங்களால் ஏற்பட்ட உயிரிழப்பா என்பது தொடர்பிலும் விசாரணைகளின் பின்னரே தெரியவரும்.

சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.