கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர பிரதம அதிதியாகப் பங்கேற்பு
மட்டக்களப்பு வின்சென்ட் பெண்கள் உயர்தர தேசிய பாடசாலையின் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா, பாடசாலைச் சமூகத்தின் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் திருமதி அனோஜா ஜனார்த்தன் தலைமையில், கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பாடசாலையின் க்ரொஃப்ட் மண்டபத்தில் இவ்விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என். மணிவண்ணன் சிறப்பு அதிதியாகவும், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் டி. ரவி கௌரவ அதிதியாகவும் பங்கேற்றனர்.
மேலும், கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் டி. சதானந்தன் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஆலோசனை தோல் மருத்துவ நிபுணர் டாக்டர் தனுஷா பாலேந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
மாணவிகளின் கல்விச் சாதனைகள், இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் மற்றும் பல்வேறு துறைகளில் அவர்கள் வெளிப்படுத்திய திறமைகளைப் பாராட்டி, அவர்களை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் இவ்வருடாந்த பரிசளிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, சாதனை படைத்த மாணவிகளின் முயற்சிகளையும் திறமைகளையும் அங்கீகரிக்கும் வகையில் பரிசளிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.
பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள் (SDS), பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகள் (VPPA) மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மாணவிகளின் கல்வி முன்னேற்றத்தையும் ஆளுமை வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்த இந்நிகழ்வு, பாடசாலைச் சமூகத்தின் ஒற்றுமையையும் மாணவர் சாதனைகளுக்கான அங்கீகாரத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.







































































































