மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஒரு மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான உதவிகள்! – லண்டன் தொண்டு அமைப்பு அன்பளிப்பு

 

































மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நோயாளர் நலனைக் கருத்திற்கொண்டு, லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் Friends of Batticaloa Hospitals Charity UK அமைப்பினால் ஒரு மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான மின்விசிறிகள் மற்றும் கதிரைகள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.

குறித்த அன்பளிப்பு நிகழ்வு இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது.

வைத்தியசாலை விடுதிகளின் பயன்பாட்டிற்கான மின்விசிறிகளும், நோயாளர்களைப் பார்வையிட வரும் உறவினர்கள் அமர்வதற்கான கதிரைகளும் இதன்போது வழங்கப்பட்டன. இவ்வுதவிகள் வைத்தியசாலையின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும், நோயாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் வசதிகளை அதிகரிப்பதற்கும் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில், Friends of Batticaloa Hospitals Charity UK அமைப்பின் தலைவரும் வைத்திய கலாநிதியுமான திருமதி காந்தா நிரஞ்சன், அமைப்பின் அறங்காவலரும் வைத்திய கலாநிதியுமான நடராஜா நிரஞ்சன், அமைப்பின் இணைப்பாளர் பொறியியலாளர் தயாளசீலன் மயூரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஆர். முரளீஸ்வரன், பிரதிப் பணிப்பாளர்கள், கணக்காளர், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், Friends of Batticaloa Hospitals Charity UK அமைப்பு நீண்டகாலமாகப் பல்வேறு மருத்துவ உதவித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் வாழும் மட்டக்களப்பு மக்களின் பங்களிப்புடன் தாயகத்தின் மருத்துவத் தேவைகளுக்கு உதவிக்கரம் நீட்டும் இத்தகைய செயற்பாடுகள், நோயாளர் நலனை மேம்படுத்துவதுடன், தாயகத்திற்கும் புலம்பெயர் சமூகத்திற்கும் இடையிலான உறவையும் வலுப்படுத்துகின்றன.