editor
அதிபர் ச. தயாபரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்களின் கலை, கலாசாரத் திறன்கள் வெளிப்பாடு
மட்டக்களப்பு, கல்லடி உப்போடை சிவானந்த தேசிய பாடசாலையின் வாணி விழா, பாடசாலை அதிபர் திரு. ச. தயாபரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் ஆரம்ப நிகழ்வாக, பாடசாலை வளாகத்தில் அமைந்துள்ள சரஸ்வதி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. தொடர்ந்து, பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் பிரதான நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்நிகழ்வின் ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் உதவி முகாமையாளர் சுவாமி பிரம்மண்யானந்தஜி அவர்களும், பிரதம விருந்தினராக சைவ வித்தகர் வெ. சசிகரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்பு நடனம் ஆகியவற்றுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தொடர்ந்து, பாடசாலை அதிபர் ச. தயாபரன் தலைமையுரையாற்றினார். ஆன்மீக அதிதி சுவாமி பிரம்மண்யானந்தஜி ஆசியுரையையும், பிரதம விருந்தினர் சைவ வித்தகர் வெ. சசிகரன் சிறப்புரையையும் வழங்கினர்.
வாணி விழாவை முன்னிட்டு பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட கோலப்போட்டி, பஞ்சபுராணப் போட்டி, பூமாலை கட்டுதல் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசுகளையும் பாராட்டுகளையும் ஆன்மீக அதிதி, பாடசாலை அதிபர், பிரதி அதிபர் மற்றும் பிரதம விருந்தினர் ஆகியோர் வழங்கிச் சிறப்பித்தனர்.
இதனுடன், மாணவர்களின் வயலின் இசையிலான பக்திப் பாடல் நிகழ்ச்சியும் இடம்பெற்றதுடன், “பண்டிகைகளினால் அதிக மகிழ்ச்சி அன்றைக்கா? இன்றைக்கா?” என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றமும் விழாவுக்கு மேலும் சிறப்புச் சேர்த்தது.
மாணவர்களின் ஆன்மீக உணர்வுகளை வளர்ப்பதுடன், இந்து சமய மரபுகள், தமிழர் பண்பாடு மற்றும் கலைத்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த இவ்வாணி விழாவில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் நன்றியுரை இடம்பெற்றது.









































































