2027 புதிய பாடத்திட்டம் அறிமுகம்! – மட்டக்களப்பில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி நெறி ஆரம்பம்

 

 



 











































மட்டக்களப்பு, ஒக்டோபர் 21

2027ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரவுள்ள புதிய முன்பள்ளிப் பாடத்திட்டம் தொடர்பான பயிற்சி நெறி, கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் ஏற்பாட்டில் நேற்று (21.10.2026) மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

“தேசிய முன் பிள்ளைப் பருவக் கல்விக் கலைத்திட்டம் – 2027” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் இப்பயிற்சி நெறியை, மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. தினகரன் ரவி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

2027ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரவுள்ள புதிய பாடத்திட்டம் தொடர்பில் முன்பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவையான தெளிவையும் வழிகாட்டலையும் வழங்கும் நோக்கில் இப்பயிற்சி நெறி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு முன்பள்ளிப் பருவ உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி அனுரேகா விவேகானந்தன், கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் சாம்பசிவம் பரணீதரன், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முன்பிள்ளைப் பருவ உத்தியோகத்தர் திருச்செல்வம் மேகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இப்பயிற்சி நெறியில் மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 50 முன்பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

முன்பிள்ளைப் பருவக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதிலும், புதிய பாடத்திட்டத்தைச் சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கான ஆசிரியர்களின் திறன்களை வலுப்படுத்துவதிலும் இத்தகைய பயிற்சி நெறிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.