ஆசிரியர் நியமனத்தில் முக்கிய அறிவிப்பு! – 23,006 பட்டதாரிகளின் நேர்முகத் தேர்வுக்கான தகுதிப் பட்டியல் வெளியீடு

 


நாடு முழுவதிலுமுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக, இலங்கை ஆசிரியர் சேவையின் 3–I (அ) தரத்திற்கு 23,006 பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான முதற்கட்ட நேர்முகத் தேர்வுக்குத் தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இன்று முதல் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் 24ஆம் திகதி பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட எழுத்துப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், நேர்முகத் தேர்வுக்குத் தகுதிபெற்றவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அரச சேவையில் பணியாற்றும் பட்டதாரிகள் மற்றும் அரச சேவையில் பணியாற்றாத பட்டதாரிகள் என இரு பிரிவினரிடமிருந்தும் இந்த ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பத்தில் வசிப்பிட மாகாணமாகக் குறிப்பிட்ட மாகாணத்திற்குரிய இணைய இணைப்பின் ஊடாகச் சென்று, தாம் விண்ணப்பித்த வர்த்தமானி அறிவித்தல் மற்றும் பரீட்சைக்குத் தோற்றிய மொழிமூலத்திற்கு ஏற்ப வெளியிடப்பட்டுள்ள பெயர்ப் பட்டியலைப் பார்வையிட முடியும்.

அத்துடன், பரீட்சை இலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தித் தேடுவதன் மூலம், தாம் முதற்கட்ட நேர்முகத் தேர்வுக்குத் தகுதிபெற்றுள்ளனரா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

தகுதிபெற்ற விண்ணப்பதாரர்கள், பெயர்ப் பட்டியலுடன் வெளியிடப்பட்டுள்ள அனைத்து அறிவுறுத்தல்களையும் கவனமாக வாசித்துப் பின்பற்ற வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், பல்கலைக்கழகப் பட்டப்படிப்பை நிறைவு செய்தமைக்கான ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டியவர்கள், எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நேர்முகத் தேர்வுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன. நேர்முகத் தேர்வுக்கான இடம், திகதி மற்றும் நேரம் ஆகிய விபரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதங்கள் விண்ணப்பதாரர்களுக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

நேர்முகத் தேர்வு தொடர்பான கால அட்டவணை மற்றும் மேலதிக விபரங்கள் இம்மாத இறுதியில் கல்வி அமைச்சின் இணையத்தளம், சம்பந்தப்பட்ட மாகாண அரச சேவை ஆணைக்குழுக்கள் மற்றும் மாகாணக் கல்வி அமைச்சுகளின் இணையத்தளங்களில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.