இந்த ஆண்டின் இறுதிக்குள் புதிதாகச் சிம் அட்டைகளைப் பெறுபவர்கள் தங்களது நேரடிப் புகைப்படத்தை (Live Photo) வழங்குவது கட்டாயமாக்கப்படவுள்ளது.

  


முறையற்ற முறையில் பெறப்படும் சிம் அட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த, விரைவில் புதிய ஒழுங்குமுறை நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) அறிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அதன் பணிப்பாளர் நாயகம் பந்துல ஹேரத் இது குறித்து விளக்குகையில்:

  இலங்கையில் முறையற்ற சிம் அட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோதச் செயல்களைத் தடுப்பதற்காக, காவல்துறை உள்ளிட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களின் கோரிக்கைக்கு அமைவாக சிம் விநியோக விதிகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

இதன்படி, இந்த ஆண்டின் இறுதிக்குள் புதிதாகச் சிம் அட்டைகளைப் பெறுபவர்கள் தங்களது நேரடிப் புகைப்படத்தை (Live Photo) வழங்குவது கட்டாயமாக்கப்படவுள்ளது. அத்துடன், 2027 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் சிம் மற்றும் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் அனைத்துப் பயனாளர்களின் அடையாளத்தையும் 100 சதவீதம் துல்லியமாக உறுதிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டிற்குள் குற்றச் செயல்களுக்குச் சிம் அட்டைகள் பயன்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். 

அதேவேளையில், இந்த புதிய அடையாள உறுதிப்படுத்தல் நடைமுறையால் சாதாரண பொதுமக்களுக்கோ அல்லது நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கோ எவ்வித சிரமமும் அல்லது பாதிப்பும் ஏற்படாத வகையில் இது செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.