கத்திக்குத்துக்கு இலக்கான தாயும் தூக்கில் தொங்கிய நிலையில் மகனும் சடலமாக மீட்பு .

 


வவுனியா – தோணிக்கல் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், அவரது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை (19) மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சம்பவ தினத்தன்று வீட்டில் தாயும் அவரது பெறாமகனும் இருந்துள்ளனர். இந்த நிலையில் உறவினர் இருவர் நேற்று மாலை குறித்த வீட்டிற்கு சென்ற போது தாய் இரத்தகாயங்களுடன் வீட்டின் பிரதான அறையில் வீழ்ந்துகிடந்துள்ளார்.

இதனையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.   எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த வீட்டின் அறை ஒன்றிற்குள் அவரது மகன் தூக்கில்தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.  இச்சம்பவம் தொடர்பாக உடனே வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.   

குறித்த சம்பவத்தில் தோணிக்கல் பகுதியை சேர்ந்த அலஸ்கிறின் வயது 60 என்ற பெண்ணும் அவரது பெறாமகனான அயந்தன் வயது 35 என்ற இளைஞருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன்,  இளைஞர் அவரது தாயை கத்தியால் குத்திவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.