முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு (Basil Rajapaksa) எதிராகச் சர்வதேச பொலிஸார் (Interpol) 'நீல நிற எச்சரிக்கை' (Blue Notice) அறிவித்தலைப் பிறப்பித்துள்ளமை ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிரான அடுத்தகட்டச் சர்வதேச சட்ட நடவடிக்கையாகப் பார்க்கப்படுகின்றது.
'நீல நிற எச்சரிக்கை' என்பது உடனடியாகக் கைது செய்வதற்கான பிடியாணை அல்ல என்ற போதிலும், சந்தேகநபரின் தற்போதைய இருப்பிடம், அவர் குறிப்பிட்ட முகவரியில் வசிக்கிறாரா, வேறு குற்றச்செயல்களுடன் தொடர்பிலுள்ளாரா மற்றும் வேறு நாடுகளுக்குத் தப்பிச் செல்ல முயற்சிக்கிறாரா என்பது குறித்த தகவல்களைத் திரட்டுவதற்கே இது பிறப்பிக்கப்படுகின்றது.
மேலும், தாய்நாட்டில் முன்னெடுக்கப்படும் குற்றவியல் விசாரணைகளுக்கு அவர் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்காக அவர் நாடு திரும்ப வேண்டும் என்றும் சர்வதேச பொலிஸார் பசில் ராஜபக்ஷவிற்கு முறைப்படி அறிவிக்கவுள்ளதுடன், விரைவில் அவருக்கு எதிராகச் 'சிவப்பு நிற எச்சரிக்கை' (Red Notice) பிறப்பிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.





