சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் ரிசானா நபீக்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட கசப்பான சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை மீண்டும் நாட்டிற்குத் திருப்பி அழைத்து வருவதற்கு அரசாங்கம் தீவிரமான இராஜதந்திரத் தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் எனச் சிவில் சமூக செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான சுவஸ்திகா அருலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
மதநிந்தனைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனோஜனுக்கு, மேல்முறையீட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், 2013 இல் ரிசானா நபீக் விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர நகர்வுகள் மிகவும் பலவீனமாக இருந்ததை நினைவுகூர்ந்துள்ளார். அத்துடன், அந்நாட்டின் கடுமையான தண்டனைகளிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்கும் ஒப்பந்தங்கள் எதுவுமின்றித் தொடர்ந்து தொழிலாளர்களை அனுப்பி வருவது குறித்தும் கவலை வெளியிட்டுள்ள அவர், இம்முறையாவது அனோஜனை மீட்க அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.





