கிரிந்திவெல பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பில், அவரது மனைவி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு செப்டெம்பர் 9ஆம் திகதி இடம்பெற்ற இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக்கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்து வந்தது.
விசாரணைகளின்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், கொலைச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததுடன், அதற்கான சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் உயிரிழந்தவரின் மனைவி நீண்டகாலமாகத் தேடப்பட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று (7) மதியம் கிரிந்திவெல – நாரங்கஸ்பிட்டிய பகுதியில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் நாரங்கஸ்பிட்டிய, கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.





