எல் நினோ தாக்கத்தால் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியான காலநிலை காரணமாக, நாட்டின் 7 மாவட்டங்களில் 25,037 குடும்பங்களைச் சேர்ந்த 78,368 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி நாடாளுமன்றத்தில் நேற்று (10) தெரிவித்தார்.
மொனராகலை, பதுளை, இரத்தினபுரி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலேயே இந்த வாழ்வாதாரப் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
விவசாயம், கடற்றொழில், பெருந்தோட்டத் தொழில், சுயதொழில், வணிகம் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதன்படி, விவசாயத் துறையில் 12,304 குடும்பங்களைச் சேர்ந்த 36,875 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் துறையில் 2,333 குடும்பங்களைச் சேர்ந்த 7,889 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மீன்பிடித் துறையில் 2,107 குடும்பங்களைச் சேர்ந்த 7,491 பேரும், சுயதொழில் துறையில் 1,769 குடும்பங்களைச் சேர்ந்த 6,039 பேரும் வாழ்வாதார இழப்பை எதிர்கொண்டுள்ளனர்.
கால்நடை வளர்ப்புத் துறையில் 2,966 குடும்பங்களைச் சேர்ந்த 9,408 பேரும், வணிகத் துறையில் 108 குடும்பங்களைச் சேர்ந்த 369 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஏனைய வாழ்வாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 3,450 குடும்பங்களைச் சேர்ந்த 10,297 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக, 25,037 குடும்பங்களைச் சேர்ந்த 78,368 பேரின் வாழ்வாதாரம் தற்போதைய வறட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரச நிறுவனங்களுடன் இணைந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.





