Facebook உள்ளிட்ட முக்கிய சமூக ஊடகங்களில் பல்வேறு குழுக்கள் உருவாக்கப்பட்டு, பெண்கள் மற்றும் சிறார்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் அசிங்கமான காட்சிகளை பணத்திற்கு விற்பனை செய்யும், வாங்கும் வகையிலான பெரிய அளவிலான ஒழுங்கமைக்கப்பட்ட சட்டவிரோத வலையமைப்பு ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
முதற்கட்ட விசாரணைகளில் கிடைத்த தகவல்கள், மேலதிக விசாரணைக்காக இலங்கை பொலிஸின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு மற்றும் கணினி குற்றப்பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. போலி சமூக ஊடக கணக்குகள் மூலம், சிலர் தங்களது நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரின் புகைப்படங்கள், வீடியோக்களையே விற்பனை செய்ய முயன்றுள்ளமை தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சட்டவிரோத குழுக்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படுவதாகவும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதனால், வீட்டுக்குள்ளேயே பெண்களும் சிறார்களும் பாதிக்கப்படக்கூடிய அபாயம் இருப்பதாக அமைச்சு எச்சரித்துள்ளது.
பெற்றோர் தங்கள் பிள்ளைகள் சமூக ஊடகங்களை எவ்வாறு பயன்படுத்துகின்றனர், யாருடன் தொடர்பு கொள்கின்றனர் என்பதைக் கவனமாக கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர் ஒருவர் இத்தகைய குற்றத்தின் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக உரிய அதிகாரிகளிடம் உதவி பெறுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தேவையான சட்ட ஆலோசனை மற்றும் உதவிக்காக 1938 மற்றும் 1929 ஆகிய இலவச உதவி தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
முக்கிய எச்சரிக்கை: பெண்கள் மற்றும் சிறார்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அவர்களின் அனுமதியின்றி பகிர்வதும், விற்பதும் கடுமையான தனியுரிமை மீறலும் குற்றச்செயலாகவும் இருக்கக்கூடும்.





