து.கௌரீஸ்வரன்.
இலங்கைக் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடம் நடத்திய எட்டாவது ஆய்வு மாநாடு கடந்த 18.08.2026 ஆந் திகதி வந்தாறுமூலையிலுள்ள பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடந்தேறியது.
முதலாவதாக ஆய்வு மாநாட்டின் தொடக்க விழா நல்லையா மண்டபத்தில் முற்பகல 09:15 மணிக்கு அதிதிகள் வரவேற்போடு ஆரம்பித்தது. நுண்கலைத்துறையின் பண்பாட்டு இசையணியினரின் சிறப்பான வரவேற்பு ஆற்றுகையுடன் அதிதிகள் விழா மண்டபத்தை நோக்கி அழைத்து வரப்பட்டார்கள்.
வரும்போது கிழக்குப்பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முத்தமிழ் வித்தகர் பேராசிரியர் சுவாமி விபுலானந்தரின் மார்பளவுச் சிலைக்கு அதிதிகளால் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டிருந்தது.
கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கணேஷ; சுரேஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப விழாவிற்குப் பிரதம அதிதியாகக் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் அவர்களும், ஆதார சுருதி உரை வழங்குனராக இலங்கைத் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா அவர்களும், அழைப்பு அதிதிகளாக கிழக்குப்பல்கலைக்கழகத்தின் பீடங்களினுடைய பீடாதிபதிகளும் வருகைதந்து சிறப்பித்திருந்தனர்.
அதிதிகள் மங்கல தீபமேற்றியதைத் தொடர்ந்து மௌன ஆராதனை செலுத்தப்பட்டது. அதையடுத்து சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் நடனத்துறை மாணவர்கள் வழங்கிய வரவேற்பு நடனம் இடம்பெற்றது.
அடுத்து, எட்டாவது ஆய்வு மாநாட்டின் இணைப்பாளர் பேராசிரியர் நடராசா புஸ்பராசா அவர்களினால் வரவேற்புரை ஆற்றப்பட்டது, அடுத்து, மாநாட்டுத் தலைவர் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கணேஷ; சுரேஷ் அவர்களின் தலைமையுரை இடம்பெற்றது.
அடுத்து மாநாட்டின் பிரதம அதிதி கிழக்குப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் அவர்கள் உரையாற்றினார். செறிவான ஆய்வறிவுக் கருத்துகளைக் கொண்டதாக இவ்வுரை அமைந்திருந்தது.
அடுத்து, ஆதாரசுருதி உரைஞரை அறிமுகப்படுத்தும் உரையினை கலாநிதி நிலாந்தி செந்தூரன் அவர்கள் வழங்கினார் தொடர்ந்து மாநாட்டின் ஆதாரசுருதி உரையினை இலங்கைத் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா அவர்கள் சுமார் நாற்பது நிமிடங்கள் ஆற்றினார். இலங்கையின் சமகால அனுபவங்களுடன் சமூக நல்லிணக்கத்திற்கான கருத்துகளை வெளிக்கொணர்ந்த காத்திரமான உரையாக அது விளங்கியிருந்தது.
இதனையடுத்து மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினரால் பிரதம அதிதி அவர்களுக்கும், ஆதாரசுருதி உரைஞருக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டு மாண்பு செய்யப்பட்டது.
அடுத்து, எட்டாவது ஆய்வு மாநாட்டின் ஆய்வுச் சுருக்க இதழ் வெளியிட்டு வைக்கப்பட்டது. மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினர் துணைவேந்தரிடம் முதலாவது இதழை வழங்கினர், துணைவேந்தர் ஆதாரசுருதி உரைஞரிடம் இரண்டாவது இதழை வழங்கி இவ்வெளியீட்டு விழாவைச் சிறப்புச் செய்தனர் இவ்விதழை கலாநிதி சு.சந்திரகுமார் அவர்களும் அவர் தலைமையிலான குழுவினரும் காத்திரமாக உருவாக்கியிருக்கின்றார்கள்.
தொடக்க விழாவின் நிறைவாக மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் செயலாளர் முதுநிலை விரிவுரையாளர் திரு மாரிமுத்து பிரகாசன் அவர்களால் நன்றியுரை செலுத்தப்பட்டது.
ஆரம்பவிழா நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்ட நேர அட்டவணைக்கு இணங்கக் கச்சிதமாக நடைபெற்றிருந்தது.
ஆரம்ப விழாவிற்கு ஆய்வுக் கட்டுரைகளை வழங்கிய ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆய்வு மாணவர்கள் எனப்பலரும் ஆர்வத்துடன் வந்து பங்குபற்றியிருந்தார்கள். நல்லையா மண்டபம் நிறைந்த பேராளர்களுடன் ஆரம்பவிழா இனிதாக நிறைவேறியது.
கிழக்குப்பல்கலைக்கழகக் கலை கலாசார பீடத்தின் ஆங்கில மொழிப் போதனாத் துறையில் முற்பகல் 11:30 – பி.ப 01:00 மணி வரைக்கும் முதலாம் அமர்வு, பி.ப 02:00 – பி.ப 03:30 வரை இரண்டாம் அமர்வு என்ற நேர அட்டவணைக்கேற்ப இரு அமர்வுகளில் ஆய்வாளர்களின் முன்வைப்புகள் நடைபெற்றன.
'புவியியலும் சூழலியலும்', 'சமூகவியலும் மானுடவியலும்', 'பன்மைத்துவச் சமூகங்களின் அடையாளங்களும் சமூக நல்லிணக்கமும'; 'இலக்கியமும் சமூகமும'; 'கல்வியும் கற்றல் கற்பித்தல் செயல்முறைகளும'; 'அரசியலும் மனித உரிமைகளும'; 'கலையாற்றுகைகளும் அதன் கட்டுருவாக்கங்களும்', 'சமயங்களும் அறமும்', 'வரலாறும் வாய்மொழி மரபுகளும'; 'உளநலமும் பெண்கள் கற்கையும'; என்ற பத்துத் தலைப்புகளின் கீழ் மொத்தம் 62 ஆய்வுக் கட்டுரைகள் இம்மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டன.
ஒவ்வொரு அமர்வுகளிலும் கணிசமான ஆய்வு மாணவர்கள் பங்குபற்றியிருந்ததுடன் ஆய்வுக் கட்டுரைகள் தொடர்பாகக் காத்திரமான உரையாடல்களும் இடம்பெற்றிருந்தன.
மாலை 04:00 மணியளவில் நல்லையா மண்டபத்தில் மாநாட்டின் நிறைவு விழாவும் ஆய்வாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவமும் நடைபெற்றது.
இதில் முதலாவதாக இம்மாநாட்டின் ஆய்வு அமர்வுகளை அவதானித்த வர்த்தக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த கலாநிதி டிலாந்தி தவகுமார் அவர்கள் தனது மதிப்பீட்டுரையினைச் சமர்ப்பித்திருந்தார்.
இதன்பின்னர் ஆய்வாளர்களுக்கான சான்றிதழ்களும், சிறந்த ஆய்வு முன்வைப்புகளைச் செய்தவர்களுக்கான சிறப்புச் சான்றிதழ்களும் கலை கலாசார பீடத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள் மற்றும் முதுநிலை விரிவுரையாளர்கள் ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டன.
திட்டமிட்டபடி சிறப்புற நடந்தேறிய எட்டாவது ஆய்வு மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவின் தலைவராக பேராசிரியர் க.சுரேஷ் அவர்களும், இணைப்பாளராகப் பேராசிரியர் ந.புஸ்பராசா அவர்களும், செயலாளராக திரு மா.பிரகாசன் அவர்களும், பொருளாளராக கலாநிதி எஸ்.எல்.எம்.நஸ்மல் அவர்களும் ஏற்பாட்டுக் குழுவின் அங்கத்தவர்களாக அ.கன்னராஜ், எஸ்.மேகலா, கலாநிதி த.மேகராசா, பி.சுமன், து.கௌரீஸ்வரன், டி.விதுக்சனா, கலாநிதி எம்.சந்துரு ஆகியோரும் செயலாற்றியிருந்தனர்.
எட்டாவது ஆய்வு மாநாட்டின் ஆலோசகர்களாகக் கலை கலாசார பீடத்தின் பேராசிரியர்களான வே.குணரெட்ணம், த.கிருஷ்ணமோகன், வ.இன்பமோகன், சி.சந்திரசேகரம், ஜெ.கென்னடி, சி.ஜெயசங்கர், கே.இராஜேந்திரம், பி.எம்.ஹம்துன், எஸ்.ஜெகநாதன், வ.குணபாலசிங்கம், ந.வாமன், எம்.வி.பௌசுல் ஆகியோர் இயங்கியிருந்தனர்.
ஆய்வுச் சுருக்க இதழின் பிரதம ஆசிரியராக கலாநிதி சு.சந்திரகுமார் அவர்களும், ஆசிரியர் குழுவினராக ஆர்.சகாயசீலன், கலாநிதி ஏ.யோகராசா, கலாநிதி எஸ்.உமாசங்கர், வி.அழகரெட்ணம், திருமதி துஷ்யந்தி சத்தியஜித், ஜே.பால்ராஜ், திருமதி சீ.என்.மோசஸ்ரூபன் ஆகியோரும் பணியாற்றியிருந்தனர்.
ஆய்வு மாநாட்டின் ஆரம்ப விழாவிலும், நிறைவு விழாவிலும் முறையே தமிழ், ஆங்கில அறிவிப்புகளையும் நிகழ்ச்சித் தொகுப்புகளையும் விரிவுரையாளர்களான து.கௌரீஸ்வரன், டி.விதுக்சனா ஆகியோர் செம்மையாகச் செய்திருந்தனர்.
விரிவுரையாளர் கிருஷ்ணராஜ் அவர்களும் தொழில்நுட்ப அலுவலர் பிரகாஷ் அவர்களும் கட்புல, செவிப்புல ஊடகங்களுக்கான தொழில்நுட்ப ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
இத்தோடு, கலை கலாசார பீடத்தின் ஒட்டுமொத்தமான முதுநிலை விரிவுரையாளர்களும், விரிவுரையாளர்களும், தற்காலிக உதவி விரிவுரையாளர்களும், உதவிப் பதிவாளர், உதவி நிதியாளர், முகாமைத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட கல்விசாரா அலுவலர்களும் ஆக்கபூர்வமாகச் செயலாற்றி இந்த ஆய்வு மாநாட்டைச் செம்மையாக நிறைவேற்றியிருந்தார்கள் எனலாம்.




