மட்டக்களப்பு பிராந்திய பக்கவாத புனர்வாழ்வு நிலையம் ஓராண்டு நிறைவு – 81 நோயாளிகளுக்கு சேவை
மட்டக்களப்பு மாவட்டத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இலவச புனர்வாழ்வு சேவைகளை வழங்கி வரும் மட்டக்களப்பு பிராந்திய பக்கவாத புனர்வாழ்வு நிலையத்தின் ஓராண்டு நிறைவு விழா, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர். முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில் தொற்றா நோய் பொறுப்பு வைத்திய அதிகாரி அவர்களின் ஒருங்கமைப்புடன் இன்று 17.08.2026 மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்றது.
இந்நிலையத்தின் முக்கியமானதும் தனித்துவமானதுமான சிறப்பம்சமாக, ஆங்கில மருத்துவமும் ஆயுர்வேத மருத்துவமும் ஒருங்கிணைந்து பக்கவாத நோயாளிகளுக்கான புனர்வாழ்வு சேவைகளை வழங்கும் இலங்கையின் முதலாவது நடைமுறையிலுள்ள புனர்வாழ்வு நிலையமாக இது திகழ்கின்றது.
நவீன ஆங்கில மருத்துவத்தின் புனர்வாழ்வு சிகிச்சை முறைகளுடன் ஆயுர்வேத மருத்துவ அணுகுமுறைகளையும் ஒருங்கிணைத்து, நோயாளிகளின் உடல், உள மற்றும் அன்றாட செயற்பாட்டு திறன்களை மேம்படுத்தும் வகையில் இந்நிலையத்தின் சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் 2025 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட இந்நிலையம், கடந்த ஓராண்டு காலமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இலவசமாக பல்துறை புனர்வாழ்வு சேவைகளை வழங்கி வருகின்றது.
81 நோயாளிகளுக்கு புனர்வாழ்வு சேவை
கடந்த ஓராண்டு காலத்தில் இந்நிலையத்தில் மொத்தம் 81 பக்கவாத நோயாளிகள் புனர்வாழ்வு சேவைகளைப் பெற்றுள்ளனர். இவர்களில் 23 பேர் பூரண சுகம் பெற்றுள்ளதுடன், 35 பேர் பகுதியளவில் சுகநிலை மற்றும் செயல்திறன் முன்னேற்றத்தைப் பெற்றுள்ளனர்.
நோயாளிகளின் உடல் இயக்கம், அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகள், பேச்சு மற்றும் தொடர்பாடல் திறன், உளநலம் மற்றும் சமூக வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான தொடர்ச்சியான புனர்வாழ்வு சேவைகள் இந்நிலையத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
பல்துறை சிகிச்சைகள்
இந்நிலையத்தில் உடற்திறன் சிகிச்சை, தொழில்சார் சிகிச்சை, பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சை, உளவியல் ஆதரவு, குடும்ப வழிகாட்டல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.
அத்துடன், நோயாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப ஆயுர்வேத வைத்திய சேவைகள், விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஒருங்கிணைந்த மருத்துவ அணுகுமுறையானது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் மற்றும் செயல்திறனை மீண்டும் கட்டியெழுப்புவதுடன், அவர்கள் தன்னம்பிக்கையுடனும் சுயாதீனமாகவும் வாழ்க்கையை முன்னெடுக்க உதவுகின்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர். முரளீஸ்வரன் அவர்கள், ஆங்கில மருத்துவமும் ஆயுர்வேத மருத்துவமும் ஒருங்கிணைந்து ஒரே புனர்வாழ்வு நிலையத்தில் சேவைகளை வழங்குவது இந்நிலையத்தின் தனித்துவமான சிறப்பம்சமாகும் எனக் குறிப்பிட்டார்.
பணியாளர்களுக்கு கௌரவம்
ஓராண்டு நிறைவு நிகழ்வின்போது, நிலையத்தின் சேவைகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து வரும் பணியாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பாராட்டப்பட்டதுடன், அவர்களின் சேவையை கௌரவிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.
பக்கவாத நோயாளிகளை மாத்திரமன்றி, அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் புனர்வாழ்வு செயற்பாட்டில் இணைத்துக்கொண்டு, நோயாளிகள் மீண்டும் கண்ணியமானதும் சுயாதீனமானதுமான வாழ்க்கையை முன்னெடுக்க உதவும் வகையில் இந்நிலையத்தின் சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிகழ்வில் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை வைத்திய நிபுணர், பிராந்திய பொறுப்பு வைத்திய அதிகாரிகள், பக்கவாத புனர்வாழ்வு நிலைய பொறுப்பு வைத்திய அதிகாரி, ஆயுர்வேத வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், புனர்வாழ்வு சிகிச்சை நிபுணர்கள், ஆயுர்வேத நிலையத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஆங்கில மருத்துவமும் ஆயுர்வேத மருத்துவமும் கைகோர்த்து, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் நம்பிக்கையையும் சுயாதீனமான வாழ்க்கையையும் வழங்கும் தனித்துவமான சேவை மையமாக மட்டக்களப்பு பிராந்திய பக்கவாத புனர்வாழ்வு நிலையம் தனது முதலாவது ஆண்டை நிறைவு செய்துள்ளது.
பக்கவாத புனர்வாழ்வு சேவைகளுக்கான தொடர்பு
📞 074 077 9306
📞 075 773 5960






























-Edited.jpg)









-Edited.jpg)
-Edited.jpg)


-Edited.jpg)

-Edited.jpg)






