
மட்டக்களப்பு, கல்லடி உப்போடை – நொச்சிமுனையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயம், 400 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றையும், தனித்துவமான கிராமிய வழிபாட்டு மரபுகளையும் தன்னகத்தே கொண்ட பழைமைவாய்ந்த அம்மன் ஆலயமாகத் திகழ்கின்றது.
தேத்தாமர நிழலின் கீழ் ஓலைக்குடிசையாக அமைந்துள்ள இவ்வாலயம், அதன் அமைவிடத்திலும் வழிபாட்டு மரபுகளிலும் தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது. கேட்பவர்க்கு கேட்ட வரங்களை வாரி வழங்கும் தாயாக பக்தர்களால் போற்றப்படும் பேச்சியம்மன், பல்வேறு குறைகளுடன் ஆலயத்தை நாடி வரும் அடியார்களுக்கு அருள்பாலித்து வருவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
குறிப்பாக, குழந்தைப் பாக்கியம் வேண்டி நேர்த்திக்கடன் செலுத்தி பேச்சியம்மனை வழிபடும் பக்தர்கள் ஏராளம். அம்பாளின் அருளால் பிள்ளைப் பாக்கியம் பெற்றதாகக் கூறும் பக்தர்களும் பெருமளவில் காணப்படுகின்றனர். இவ்வாறு ஆயிரக்கணக்கான பக்தர்களின் குறைகளை நீக்கி அருள்பாலிக்கும் அருட்சக்தியாக பேச்சியம்மன் விளங்குவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு 2026.08.09 ஞாயிற்றுக்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி, 2026.08.17 திங்கட்கிழமை மாலை பள்ளயத்துடன் நிறைவடையவுள்ளது.
மட்டக்களப்பு பிரதேசத்திற்கு மாத்திரம் உரித்தான ஆலயமாக இல்லாமல், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து வழிபடும் முக்கியமான தேசத்து ஆலயமாகவும் இவ்வாலயம் இன்று விளங்குகின்றது.
அத்துடன், இப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் இலண்டன், கனடா, சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசித்து வந்தாலும், வருடாந்த திருச்சடங்கு காலத்தில் தாயகத்திற்கு வந்து சடங்கு நிகழ்வுகளில் கலந்துகொண்டு பேச்சியம்மனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
பேச்சித்தாயார் தனது மெய்யடியார்களின் கனவுகளில் தோன்றி, பல்வேறு வேண்டுகோள்களையும் அறிவுறுத்தல்களையும் வழங்கியதாகவும் பக்தர்கள் மத்தியில் நம்பிக்கை நிலவுகின்றது.
திருச்சடங்கின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான நெல் குற்றும் சடங்கு 2026.08.16 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இச்சடங்கு மிகவும் பாரம்பரியமானதும் கண்கொள்ளாக் காட்சியுமாக அமைகின்றது. அதிகாலையில் பெண்கள் நீராடி, வீடு வீடாகச் சென்று “பேச்சித் தாயாருக்கு மடிப்பிச்சை தாருங்கள்” எனக் கேட்டு நெல்லைச் சேகரித்து வருகின்றனர்.
மடிப்பிச்சையாகப் பெறப்படும் நெல்லை மடி நிறையச் சுமந்து வந்து ஆலயத்தில் கொட்டுகின்றனர். சில ஆண்களும் நேர்த்திக்கடனாக மடிப்பிச்சை எடுப்பது இச்சடங்கின் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இவ்வாறு சேகரிக்கப்படும் நெல் நூற்றுக்கும் மேற்பட்ட மூடைகளாகக் குவிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் ஆண்களும் பெண்களும் இணைந்து உரல்–உலக்கைகளைப் பயன்படுத்தி நெல்லைக் குற்றும் நிகழ்வு பாரம்பரியத்தையும், சமூக ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் கண்கொள்ளாக் காட்சியாக அமைகின்றது.
இதனைத் தொடர்ந்து 2026.08.17 திங்கட்கிழமை பள்ளயம் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பக்தர்கள் பெருமளவில் பொங்கல் படைத்து வழிபடுவதுடன், ஏழு கன்னிமார்களுக்கும் சர்க்கரை அமுது வழங்கப்படும். அதனோடு பள்ளயமும் வழங்கப்படுகின்றது.
தலைத்தெய்வாதி மற்றும் ஏனைய தெய்வாதிகளைச் சிறப்பான முறையில் வழிபட்டு, எவ்வித தடங்கலுமின்றி நேர்த்தியாக திருச்சடங்கு நடைபெறுவது இவ்வாலயத்தின் தனிச்சிறப்பாகக் கருதப்படுகின்றது.
திருச்சடங்கு நிகழ்வுகளின் தொடர்ச்சியாக 2026.08.19 புதன்கிழமை வைரவர் சடங்கு வைபவம் நடைபெறவுள்ளது.
இப்பூஜை நிகழ்வின்போது நோய் நொடிகள் நீங்கி, ஆரோக்கியமும் நல்வாழ்வும் கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் பக்தர்களுக்கு நூல்கள் கட்டப்படும்.
இவ்வாறு மட்டக்களப்பு கல்லடி உப்போடை நொச்சிமுனையில் அமைந்துள்ள ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு நிகழ்வுகள், பல நூற்றாண்டுகளாகப் பேணப்பட்டு வரும் கிராமிய தெய்வ வழிபாட்டு மரபுகளையும், மக்களின் ஆழமான நம்பிக்கையையும் பக்தியையும் வெளிப்படுத்தும் முக்கியமான ஆன்மிக நிகழ்வாகத் திகழ்கின்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி பாரம்பரிய சடங்குகளை முன்னெடுத்து, பேச்சித்தாயாரை வழிபடும் இவ்வாலயத் திருச்சடங்கு, மட்டக்களப்பின் தொன்மையான கிராமிய வழிபாட்டு மரபுகளின் உயிரோட்டமான அடையாளமாகவும் விளங்குகின்றது.



















