மட்டுநகர் மாமாங்கத் திருவிழாவை முன்னிட்டு நுண்கலைத் துறையின் பாரம்பரிய அரங்க விழா கோலாகலமாக ஆரம்பமாகியது.




















































பேராசிரியர் து. கௌரீஸ்வரன் &  செய்தியாசிரியர் 



 கிழக்குப்பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை மட்டுநகர் மாமாங்கத் தீர்த்தக்கரைத் திருவிழாவைச் சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் நடத்தும் பாரம்பரிய அரங்க விழா இன்று (04.08.2026) செவ்வாய்க்கிழமை முற்பகல் ஆலய முற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள வட்டக்களரியில் நுண்கலைத்துறைத் தலைவர் திருமதி துஷ்யந்தி சத்தியஜித் அவர்களின் தலைமையில் மங்கல தீபமேற்றலுடன் ஆரம்பமாகியது.

 இன்றைய ஆரம்ப வைபவத்திற்குப் பிரதம அதிதியாகக் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கணேஸ் சுரேஷ் அவர்களும், சிறப்பு அதிதியாக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியை புளோரன்ஸ் பாரதி கெனடி அவர்களும், கௌரவ அதிதிகளாக ஆலய வண்ணக்குமார்களான திரு கி. புவனச்சந்திரா அவர்களும், திரு உ. சுவேந்திரகுமார் அவர்களும் பங்குபற்றினர்.

 இவர்களுடன் பேராசிரியர்களான ஜெ. கெனடி, சி. ஜெயசங்கர், வ. இன்பமோகன் ஆகியோரும், முதுநிலை விரிவுரையாளர் அழகரெட்ணம் அவர்களும்,முன்னாள் வண்ணக்கர் திரு அரசரெட்ணம்,மூத்த ஆக்க இலக்கியப் படைப்பாளர் வி. கௌரிபாலன், அண்ணாவியார் சீ. அலக்சாண்டர் ஆகியோரும் பங்குபற்றிச் சிறப்பித்தனர்.

 நுண்கலைத்துறை விரிவுரையாளர் து. கௌரீஸ்வரன் வரவேற்புரையாற்றினார்இதையடுத்து துறைத்தலைவர் திருமதி துஷ்யந்தி சத்தியஜித் அவர்கள் தலைமையுரையாற்றினார், அதையடுத்து பாரம்பரிய அரங்க விழா குறித்து முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி சு. சந்திரகுமார் உரையாற்றினார், அதையடுத்துப் பேராசிரியர் சி. ஜெயசங்கரின் சிறப்புரை இடம்பெற்றது.

 இதன்பின்னர் நுண்கலைத்துறை மாணவர்கள் வழங்கிய வீரபத்திரர் வசந்தன் கூத்து நடைபெற்றது. இதன் அண்ணாவியாராக திரு சீ. அலக்சாண்டர் அவர்களும், இணைப்பாளராக து. சத்தியஜித் அவர்களும் இயங்கினர்.

 அடுத்து கௌரவ அதிதி, சிறப்பு அதிதி, பிரதம அதிதி ஆகியோருடைய உரைகள் இடம்பெற்றன.

 நிறைவாக, விரிவுரையாளர் திருமதி பிரசாந்தி இளங்கோ அவர்களின் நன்றியுரை நடைபெற்றது.

 அதையடுத்து பாரம்பரிய அரங்கப் பொருள்களின் காட்சிக் கூடத்தின் திறப்பு விழா நடைபெற்று ஆரம்ப வைபவம் இனிதே நிறைவடைந்தது.

 இவ்வரங்க விழாவில் இன்று மாலை 05:00 மணிக்கு மகிடிக் கூத்தும், இரவு 08:00 மணியின் பின்னர் வசந்தன் கூத்தும், ‘ஆளுமையாள் ஔவை’ என்னும் வடமோடிக் கூத்தும் ஆற்றுகை செய்யப்படவுள்ளன.

 ஆளுமையாள் ஔவை என்னும் வடமோடிக் கூத்தின் அண்ணாவியாராக சி. ஞானசேகரம் அவர்களும், உதவியாக விரிவுரையாளர் து. கௌரீஸ்வரன் அவர்களும், முன்னீடுகாரராக திருமதி தே. அருட்ஜோதி அவர்களும் பங்குபற்றுகிறார்கள். இக்கூத்தினை மட்டுநகர் கல்லடி சித்திவிநாயகர் அறநெறிப் பாடசாலை மாணவர்களும்,அன்புநெறிக் கலை மன்ற உறுப்பினர்களும் வழங்கவுள்ளனர்.

 நாளை புதன்கிழமை இரவைக்கு ‘மஞ்சளழகி’ என்னும் வடமோடிக் கூத்து நடைபெறவுள்ளது. இக்கூத்தின் அண்ணாவியாராக சீ. அலக்சாண்டர் அவர்களும், ஏடுபார்ப்பவராக திரு முத்துலிங்கம் அவர்களும், இணைப்பாளராக கலாநிதி சு. சந்திரகுமார் அவர்களும் பங்குகொள்கிறார்கள். இக்கூத்தினை நுண்கலைத்துறை மாணவர்கள் வழங்கவுள்ளனர்.