
சிவகுமார் .M
மட்டக்களப்பு கல்லடி உப்போடை ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் சாரதா பாலர் பாடசாலையின் 52-வது வருடாந்த விளையாட்டு விழா, சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
கல்லடி உப்போடை ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது..
விழாவுக்கு பிரதம அதிதியாக முன் பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. அனுரேகா விவேகானந்தன் கலந்து சிறப்பித்தார் .
விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் T. மேகராஜ் , மக்கள் வங்கி ஓய்வுநிலை உதவி பிராந்திய முகாமையாளர் ஜே.ரவீந்திரராஜா மற்றும் பாலமீன் மடு பிரதேச வைத்திய சாலை பல்வைத்திய நிபுணர் திருமதி மஞ்சுளா ரவீந்திரராஜா ஆகியோர் பங்கேற்று இருந்தனர் .
நிகழ்வின் ஆரம்பமாக பொது முகாமையாளரால் தேசியக் கொடி ஏற்றப்பட்டதுடன், அதிதிகளால் மிஷன் கொடி மற்றும் பாடசாலைக் கொடிகளும் ஏற்றி வைக்கப்பட்டன. தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு, ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு சத்தியப்பிரமாணத்துடன் விளையாட்டு விழா முறைப்படி தொடங்கப்பட்டது.
பாலர் பாடசாலை ஆசிரியர்களின் சிறப்பான நெறிப்படுத்தலில் போட்டிகள் அனைத்தும் இனிதே நடைபெற்றன. பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்திய சிறார்களுக்கு அதிதிகளால் சான்றிதழ்களும், வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.
முன்பள்ளிகளில் நடைபெறும் விளையாட்டு நிகழ்வுகளை "விளையாட்டுப் போட்டி" என்று அறிவிப்பதை விட, "விளையாட்டு விழா" என்ற பெயரில் அறிமுகப்படுத்துவதே சிறார்களின் உளவியல் வளர்ச்சிக்கும், முழுமையான ஆளுமை மேம்பாட்டிற்கும் மிகவும் பொருத்தமான அணுகுமுறையாகும். இந்த நல்ல முன்மாதிரியை சாரதா பாலர் பாடசாலை முன்னெடுத்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. இதனை அனைத்து முன்பள்ளிகளும் பின்பற்ற வேண்டும்.
சிறார்களுக்கு வெற்றி–தோல்வி என்ற எண்ணத்தை விதைப்பதை விட, விளையாட்டின் மகிழ்ச்சியையும் பங்கேற்பின் அருமையையும் உணர்த்துவதே முக்கியமானது. "தோல்வி" என்ற பதற்றம் இல்லாதபோதுதான் அவர்கள் எந்த அச்சமும் இன்றி சுதந்திரமாக விளையாடி மகிழ்வார்கள். விளையாட்டை ஒரு சுமையாக அல்லாமல், மகிழ்ச்சியான விழாவாகக் கருதும் மனப்பாங்கு உருவானால், உடல்திறன் செயல்பாடுகள் மீதான ஆர்வம் வாழ்நாள் முழுவதும் அவர்களிடம் நிலைத்திருக்கும்.
அதேபோல், குழந்தைகளின் மதிப்பெண்களையோ அல்லது விளையாட்டுத் திறனையோ மற்ற குழந்தைகளுடன் ஒருபோதும் ஒப்பிடக் கூடாது. ஒவ்வொரு குழந்தையும் தனித்திறமை கொண்டவர்கள் என்பதை பெற்றோர்களும் ஆசிரியர்களும் உணர்ந்து, அவர்களின் தனித்துவத்தை மதித்து ஊக்குவிக்க வேண்டும்.
விளையாட்டு விழாக்களில் சிலருக்கு மட்டுமே வெற்றிப் பரிசுகள் வழங்குவதை விட, பங்கேற்ற அனைத்துக் குழந்தைகளுக்கும் சான்றிதழ்களும் நினைவுப் பதக்கங்களும் வழங்கப்பட வேண்டும். இதன் மூலம், விளையாட்டின் உண்மையான நோக்கம் வெற்றி அல்ல; மகிழ்ச்சி, கற்றல், ஒற்றுமை மற்றும் பங்கேற்பு என்பதையே குழந்தைகள் புரிந்துகொள்வார்கள்.
பால்ய வயதிலேயே நட்பு, புரிந்துணர்வு, ஒற்றுமை, விட்டுக்கொடுத்தல், மன்னிப்பு, ஒழுக்கம், நேரம்பேணுதல், மனிதநேயம் மற்றும் தலைமைத்துவம் போன்ற உயரிய பண்புகளை குழந்தைகளின் மனதில் விதைக்க வேண்டும். அவ்வாறு வளர்க்கப்படும் குழந்தைகளே நாளைய தினத்தில் பொறுப்புணர்வும் மனிதநேயமும் கொண்ட, நேர்மையான, சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் முன்மாதிரிப் பிரஜைகளாக உருவெடுப்பார்கள்.
குழந்தைகளின் முகத்தில் மலரும் புன்னகையே எந்த விளையாட்டு விழாவின் மிகப் பெரிய வெற்றியாகும்.

























































































































