பாரம்பரியத்தைப் போற்றும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய ஏர் பூட்டு விழா-2026.09.29









 































EDITOR


வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் ஏற்பாட்டில் பாரம்பரிய ஏர் பூட்டு விழா, இன்று செவ்வாய்க்கிழமை (29.09.2026) ஆலயத்திற்குச் சொந்தமான வயல் நிலத்தில் சிறப்பாக நடைபெற்றது.

படுவான்கரையின் பாரம்பரிய விவசாய மரபுகளையும், ஆலயத்துடன் இணைந்துள்ள பண்பாட்டு நடைமுறைகளையும் பேணிப் பாதுகாக்கும் வகையில், இந்த ஏர் பூட்டு விழா பாரம்பரிய முறையைத் தழுவி ஏற்பாடு செய்யப்பட்டது.

நிகழ்வின் ஆரம்பமாக மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றதுடன், இறைவணக்கமும் நடைபெற்றது. தொடர்ந்து விழாக்குழுவின் பொருளாளர் திரு. ச. தங்கவேல் வரவேற்புரையாற்றினார். விழாக்குழுத் தலைவர் திரு. க. சிவகுருநாதன் தலைமையுரையாற்றினார்.

இதனையடுத்து சிவஸ்ரீ சுப்பிரமணியம் குருக்கள் தலைமையில் பூமி பூசை மற்றும் கோமாதா பூஜை என்பன இடம்பெற்றன.

தொடர்ந்து ஆலய வண்ணக்கர் தலைவர் இ. மேகராசா, வண்ணக்கர் செயலாளர் சி. கங்காதரன், வண்ணக்கர் பொருளாளர் ச. கோகுலகிருஷ்ணன் ஆகியோர் ஏர்பிடித்து வயலை உழுது விவசாயப் பணிகளை ஆரம்பித்து வைத்தனர்.

நிகழ்வில் கலாபூஷணம் ஞானபேரின்பம் (துரையப்பா), பட்டிப்பளை பிரதேச இந்து அலுவல்கள் பொறுப்பதிகாரி திரு. க. கலியுகராஜ், கொக்கட்டிச்சோலைப் பிரதேச பெரும்பாக உத்தியோகத்தர் மற்றும் கலாசார உத்தியோகத்தர், கொக்கட்டிச்சோலை, தாந்தாமலை, மண்டபத்தடி ஆகிய பிரதேசங்களுக்குட்பட்ட கமநல அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச விவசாயிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் நிறைவில் ஆலய வண்ணக்கர் தலைவர் திரு. இ. மேகராசா நன்றியுரை வழங்கினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பெருநிலப் பிரதேச மக்களின் வாழ்வியலோடு விவசாயம் தொன்றுதொட்டு பின்னிப் பிணைந்துள்ளது. இப்பகுதி மக்களின் பிரதான வாழ்வாதாரமாக விளங்கும் விவசாயப் பணிகள், இயற்கை, இறைநம்பிக்கை மற்றும் பாரம்பரியத்துடன் இணைந்ததாகவே தலைமுறை தலைமுறையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நிறைவடைந்த பின்னர், வயலை உழுது நாற்று விதைத்து விவசாயப் பணிகளை ஆரம்பிப்பது நீண்டகாலமாகப் பேணப்பட்டு வரும் ஒரு முக்கியமான பாரம்பரியமாகும்.

ஏர் பூட்டு விழா என்பது வெறுமனே வயலை உழுது ஆரம்பிக்கும் நிகழ்வல்ல; மண்ணுக்கும் உழவனுக்கும் இடையிலான உறவையும், இயற்கைக்கும் இறைநம்பிக்கைக்கும் இடையிலான இணைப்பையும் வெளிப்படுத்தும் ஒரு பண்பாட்டு அடையாளமாகும். பூமிக்கு பூஜை செய்து, கோமாதாவை வழிபட்டு, ஏர் பூட்டி வயலை உழுது விவசாயப் பணிகளை ஆரம்பிப்பதன் ஊடாக, வளமான விளைச்சலுக்காக இறைவனையும் இயற்கையையும் வேண்டிக்கொள்ளும் மரபு இன்றும் தொடர்கிறது.

தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் புனர்நிர்மாணப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக தேரோட்டம் நடைபெறாத சூழ்நிலையிலும், ஆலயத்துடன் இணைந்த பாரம்பரிய நடைமுறைகளைத் தொடர்ந்து பேணிப் பாதுகாக்கும் நோக்கில் இவ்வாண்டும் ஏர் பூட்டு விழா நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மண்ணையும், மரபையும், விவசாயத்தையும், இறைநம்பிக்கையையும் ஒன்றிணைக்கும் இந்த நிகழ்வு, படுவான்கரையின் தொன்மையான வேளாண் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லும் ஓர் உயிரோட்டமான மரபுச் சின்னமாக திகழ்கின்றது.