மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த ஆடி அமாவாசை மகோற்சவத்தின் கொடியேற்றம் -2026.08.03

 

 













ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலங்களுள் ஒன்றானதும்; மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்றதுமான மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த ஆடிப்பாவாசை மகோற்சவம் இன்று (03.08.2026) கொடியேற்றத்துடன் மிகவும் கோலாகலமாக ஆரம்பமானது.

இன்று காலை ஆலயத்தில் விசேட யாகபூஜை இடம்பெற்றதுடன், மூலமூர்த்திக்கு மகா கும்பபிஷேகமும் சிவச்சாரியார்களால் சிறப்பாகச் செய்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மகோற்சவக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை ஆலய உள்வீதியுலா கொண்டுவரப்பட்டு, கொடித்தம்பத்திற்கு அருகில் வைக்கப்பட்டு விசேட பூஜைகள் நடத்தப்பட்டன.

 தொடர்ந்து, சரியாக நண்பகல் 12.00 மணிக்கு ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ சிவ சுகுமார் குருக்கள் அவர்களினால் வேதபாராயணங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க மகோற்சவக் கொடியேற்றம்  இடம் பெற்றது 

அதனைத் தொடர்ந்து கொடித்தம்பத்திற்குச் சிறப்பு அபிஷேகமும் பூசைகளும் இடம்பெற்றதுடன், வருகை தந்திருந்த அடியார்கள் அனைவருக்கும் பிரதம குருவினால் ஆசிகளும் பிரசாதமும் வழங்கப்பட்டன.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து விநாயகப்பெருமான் உள்வீதியுலா வந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டு, அங்கும் விசேட பூஜைகள் நடைபெற்றன. இத்திருவிழாவில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு எம்பெருமானின் அருள் பெற்றுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.