மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் “நீரிழிவு நோய் மீள்நிலை (Diabetes Remission) கிளினிக்” வெற்றிகரமாக ஆரம்பம்






மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி நோயை கட்டுப்படுத்துவதோடு, நோயின் மீள்நிலை (Diabetes Remission) அடையும் நோக்கில் செயல்படும் Diabetes Remission Clinic இன்று (05.08.2026) வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஆர். முரளீஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டதுடன் 

இக்கிளினிக்கான தொழில்நுட்ப மற்றும் நிபுணத்துவ வழிகாட்டுதலை,

* நடவடிக்கை ஆலோசகர் ஊட்டச்சத்து வைத்திய நிபுணர் டாக்டர் கிளோடியா ரதி ஜெயரூபன்,
* உட்சுரப்பியல் (Endocrinology) ஆலோசகர் டாக்டர் லாவண்யா பிரணவன்,
* விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மருத்துவ ஆலோசகர் டாக்டர் A.A.M. புஹைம்
    ஆகியோர் இணைந்து வழங்குகின்றனர்.

இக்கிளினிக் மாதத்திற்கு இரு தடவைகள் நடைபெறவுள்ளது. நோயாளிகளுக்கு தனிப்பட்ட உணவுத் திட்டம், உடற்பயிற்சி ஆலோசனை, உடல் எடை மேலாண்மை, வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் மருத்துவ கண்காணிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைந்த முறையில் வழங்குவதன் மூலம், மருந்து தேவையை குறைத்து, நீரிழிவு நோயை மீள்நிலைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

ஆரம்ப நாளான இன்று, ஐந்து நோயாளிகள் நிபுணர் மருத்துவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு, அவர்களுக்கான தனிப்பட்ட சிகிச்சை மற்றும் வாழ்க்கை முறை திட்டங்கள் வகுக்கப்பட்டன.

இத்திட்டம் எதிர்காலத்தில் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, அதிகளவான நீரிழிவு நோயாளிகள் பயனடையும் வகையில் ஒரு முன்னோடியான சேவையாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலைநிறுத்தப்படும் என்பதுடன் 

“சரியான உணவுமுறை, ஒழுங்கான உடற்பயிற்சி, மருத்துவ கண்காணிப்பு மற்றும் நோயாளியின் உறுதியான ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் நீரிழிவு நோயின் மீள்நிலையை அடைய முடியும்” என்ற செய்தியை இந்நிகழ்வு வலியுறுத்தியது.