கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் சுகுணன் விபத்தில் காயம் – மட். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை!! நிலைமை திருப்தி என்கிறார் பணிப்பாளர் முரளி

 



( வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மருத்துவர் குணசிங்கம் சுகுணன் நேற்று (03) திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயங்களுக்கு உள்ளாகி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அது தொடர்பாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் இரா. முரளீஸ்வரனிடம் கேட்ட பொழுது:
நேற்று மாலை 7:30 மணியளவில் பணிப்பாளர் சுகுணன் விபத்துக்குள்ளாகி எமது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தலையில் லேசாக அடிபட்டு இருந்தது. சிடி ஸ்கேன், எக்ஸ்ரே போன்றவற்றை எடுத்து சிகிச்சைகளை அளித்த பொழுது பிரச்சனை இல்லை. மற்றும் உரசல் காயங்கள் இருந்தாலும் என்பு வெடிப்புகள் அல்லது வேறு ஏதாவது ஒன்றும் இல்லை. நிலைமை திருப்தியாக இருக்கின்றது என்று சொன்னார் .
அத்தருணம் கல்முனை ஆதார வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் டாக்டர் பி.ஸ்ரீசங்கரும் உடனிருந்தார்
சம்பவம் பற்றி தெரியவருவதாவது;
திங்கள் மாலை கல்முனை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற வைத்தியசாலை அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், கடமை முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தபோது, தாழங்குடா பகுதியில் 7 மணியளவில் அவர் மாட்டுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த நேரத்தில், முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் மருத்துவர் எம்.முருகானந்தனும் அந்த இடத்தில் வந்திருந்தார்.
உடனடியாக 1990 ஆம்புலன்ஸ் சேவைக்கு அறிவித்து, மறுகணமே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது சேர்ஜிகல் ஐசியூ இல் அவதானிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.