செய்தி ஆசிரியர்
மட்டக்களப்பு கல்லடி – உப்போடை, நொச்சிமுனை ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவத்தின் முக்கிய பாரம்பரிய நிகழ்வான நெல்லுக்குத்தும் சடங்கு, 16.08.2026 மாலை பக்தி பூர்வமாகவும் விமரிசையாகவும் இடம்பெற்றது.
நூற்றாண்டுகள் கடந்தும் தலைமுறை தலைமுறையாகப் பேணப்பட்டு வரும் இந்தப் பாரம்பரிய சடங்கு, அன்னையின் அருளை வேண்டி பக்தர்களால் நேர்த்திக்கடனாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அம்மனிடம் நேர்த்திக்கடன் வைத்து வழிபடும் அடியவர்கள், சடங்கு காலங்களில் அதிகாலையில் நீராடி, வீடு வீடாகச் சென்று “பேச்சித் தாயாருக்கு மடிப்பிச்சை தாருங்கள்” எனக் கூறி மடிப்பிச்சையாக நெல்லைப் பெற்றுக்கொள்கின்றனர்.
பின்னர், பக்தர்கள் தங்களது மடிகளில் நெல்லைச் சுமந்தவாறு வீதிவழியாக கால்நடையாக ஆலயத்தை வந்தடைந்து, அங்கு அவற்றை காணிக்கையாகச் செலுத்துகின்றனர். பெண்களுடன் சில ஆண்களும் நேர்த்திக்கடனாக மடிப்பிச்சை நெல் எடுத்து இந்நிகழ்வில் பங்கேற்பது சிறப்பம்சமாகும்.
இவ்வாறு பக்தர்களால் மடிப்பிச்சையாக வழங்கப்படும் நெல், ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மூடைகள் அளவிற்கு திரள்கின்றமை, இந்தப் பாரம்பரிய சடங்கின் மீதான மக்களின் ஆழமான பக்தி மற்றும் நம்பிக்கையை எடுத்துக்காட்டுகின்றது.
இதனைத் தொடர்ந்து, 2026.08.16 அன்று மாலை, ஆலய முன்றலில் பாரம்பரிய முறைப்படி அம்மன் சந்நிதியில் உரல் வைத்து நெல்லுக்குத்தும் சடங்கு நடைபெற்றது.
பக்தர்கள் புடைசூழ, பெண்கள் உள்ளிட்ட அடியவர்கள் பாரம்பரிய முறையில் உரலில் நெல் குத்திய காட்சி, பக்தியையும் பாரம்பரியத்தையும் ஒருசேர வெளிப்படுத்தும் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.
மட்டக்களப்பு மண்ணின் தொன்மையான பண்பாட்டு மற்றும் ஆன்மிக அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் நொச்சிமுனை பேச்சியம்மன் ஆலயத்தின் இந்நெல்லுக்குத்தும் சடங்கு, இன்றைய தலைமுறையினருக்கும் அந்தப் பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துச் செல்லும் வகையில் சிறப்பாக இடம்பெற்றது.











































