மட்டக்களப்பு கல்லடி உப்போடை நொச்சிமுனை பேச்சித் தாயாரிடம் ’மடிப்பிச்சை’ ஏந்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றிய ஆயிரக்கணக்கான பக்தர்கள்

 


 































































































செய்தி ஆசிரியர்



மட்டக்களப்பு கல்லடி உப்போடை நொச்சிமுனை பேச்சியம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மடிப்பிச்சை ஏந்தி சென்று தங்களது நேர்த்திக்கடனை பக்தி பூர்வமாக நிறைவேற்றினர்.

மட்டக்களப்பு கல்லடி உப்போடை நொச்சிமுனையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சியம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவம், கடந்த 09.08.2026 அன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி பக்தி பூர்வமாக இடம்பெற்று வருகின்றது.

இதன் முக்கிய நிகழ்வாக, நேற்று (16.08.2026) ஞாயிற்றுக்கிழமை, ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கான அன்னையின் அடியவர்கள் மடிப்பிச்சை ஏந்தி ஆலயத்தை நோக்கி சென்று, தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

அம்மனின் அருளையும், குடும்ப நலனையும், நோய் நீங்குதலையும், வாழ்வில் வளத்தையும் வேண்டி பக்தர்கள் தங்களால் எடுத்துக்கொண்ட நேர்த்திக்கடனை நிறைவேற்றும் இந்த மடிப்பிச்சை நிகழ்வு, பல நூற்றாண்டுகளாக தலைமுறை தலைமுறையாக பக்தி பூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொன்மையான பாரம்பரிய நிகழ்வாகும்.

ஆண்களும் பெண்களும் பக்தி உணர்வுடன் மடிப்பிச்சை ஏந்தி ஆலயத்தை நோக்கி வருகை தந்த காட்சி, நொச்சிமுனை பேச்சியம்மன் ஆலயத்தின் பாரம்பரியத்தையும், அன்னை மீதான மக்களின் ஆழமான நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

நூற்றாண்டுகள் கடந்தும் தொடரும் இந்தப் பாரம்பரியம், மட்டக்களப்பு மண்ணின் பண்பாட்டு மற்றும் ஆன்மிக அடையாளங்களில் ஒன்றாக இன்றும் நிலைத்து நிற்கின்றது.