கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையினரின் ஆற்றுகை மையக்கற்றலில் உருவான மஞ்சலழகி வடமோடிக் கூத்து மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் அரங்கேற்றப்பட்டது





























































மஞ்சலழகி வடமோடிக் கூத்தின் அரங்கேற்ற விழா நுண்கலைத்துறையின் தலைவர் திருமதி துஷ்யந்தி சத்தியஜித் அவர்களின் தலைமையில் மக்கள் ஒருங்கிணைய நடைபெற்றது. இந்நிகழ்வில் ஐக்கிய அமெரிக்கா பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சுரேஸ் கனகராஜா, நுண்கலைத்துறையின் பேராசிரியர்  சி. ஜெயசங்கர், முதுநிலை விரிவுரையாளர் கு.ரவிச்சந்திரன், விரிவுரையாளர் திருமதி பிரசாந்தி இளங்கோ, வண்ணக்குமார் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர். இந்த அரங்கேற்ற விழா 05.08.2026 அன்று மாமாங்கேஸ்வர்  ஆலயமுன்றலில் இடம்பெற்றது. 
மஞ்சலழகி வடமோடிக் கூத்து நுண்கலைத்துறையில் மூன்று மாத காலமாக கலாநிதி சு. சந்திரகுமாரின் இணைப்பாக்கத்திலும் அவரது ஆற்றுகை மையக் கற்பித்தலிலும் உருவானமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கூத்தின் அண்ணாவியார் மட்டக்களப்பில் புகழ்பெற்ற திரு சி.அலெக்ஸ்சாண்டர் ஆவார். இதன் ஏட்டாரியர் த.முத்துலிங்கமும், அதற்கு உதவியாக செல்வி கு.யதுர்ஷினியும், தாளத்திற்கு து.கௌரீஸ்வரனும் செயற்பட்டனர்.
நுண்கலைத்துறையின் தயாரிப்பிலும் ஆற்றுகை மையக்கற்றலிலும் உருவான கண்டிராசன் தென்மோடிக் கூத்து, அலங்கராரூபன் தென்மோடிக் கூத்து, மழைப்பழம் சிறுவர் கூத்து, மகிடிக்கூத்து, வீரகுமாரன் நாடகம் வடமோடிக்கூத்து, நொண்டி நாடகம் தென்மோடிக் கூத்து வரிரையில் 2026ஆம் ஆண்டு மஞ்சலழகி எனும் வடமோடிக் கூத்து பெண்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான கதையை மையப்படுத்தி ஆடப்பட்டது. பெண்களுக்கு ஏற்படும் ஆதிக்க அதிகாரநிலையிலான பலாத்காரத்தை பெண்ணே துணிச்சலுடனும், சாணக்கியத்துடனும் வெல்வது பிரதானமானது. கோட்பாட்டு நிலையில் கூத்தைக் கற்பிப்பதற்கு மாறாக முழுக் கூத்தையும் அதன் தொடர் செயற்பாட்டுடன் ஆற்றுகை நிலையில் செயல்முறையில் அண்ணாவியாரின் துணையுடன் கற்பித்து, ஆடிப் பயின்று, அதனூடாக கோட்பாட்டை கற்பதும், கோட்பாட்டை உருவாக்குவதும், ஆராய்ச்சி செய்வதும் வலுவடையும். 
இந்த அரங்கேற்ற விழாவில் மாணவர்களாகப் பங்குபற்றிய கூத்துக் கலைஞர்களின் பெற்றோர், அவர்களது உறவினர்கள், நண்பர்கள், ஊர்மக்கள், ஊர்க்கலைஞர்கள் எனப் பலரும் பங்குகொண்டனர். பூமாலை, காசி மாலை அணிவித்துக் கொளரவித்தல், பொன்ஆடை போர்த்திக் கௌரவித்தல் எனப் பலவழிகளில் அரங்கேற்ற விழா மேம்பட்டது. இதற்கு முனைக்காட்டைச் சேர்ந்த மேஸ்த்திரியார் என். சிவாரெத்தினம் செயற்பட்டார். மாணவர்களும் வேட, உடை, ஒப்பனை வடிவமைப்பில் தமது ஆற்றலையும், திறனையும் வெளிப்படுத்தினர். கூத்தராக ஆடிய மாணவர்கள் தங்களுக்குரிய பாத்திரங்களைச் சிறப்பாக ஆட்டம், பாட்டு, நடிப்பு மூலம் வெளிப்படுத்தினர். 
இதில் பின்வரும் கலைஞர்கள் பங்குபற்றினர். இ.சஞ்சிதா கட்டியக்காரனாகவும், இ.வினோதன் உத்தமகேதுவாகவும், மே.திலட்சனா சிரோண்மணியாகவும், க.டஷிந்திரா செண்பகாபதியாகவும், த.தேவிகா மந்திரியாகவும், சு.சந்திரகுமார் மதுரேசனாகவும்,  ஜீ.கிறிஸ்டிலா செந்திருவாளாகவும், ஜ.அக்ஸ்சயா மருத்துவிச்சியாகவும், சு.எழில்ராஜ்  சத்தியசீலனாகவும், நா.நிதுஜா மஞ்சளழகியாகவும், வே.லிலானி உபாத்தியாராகவும், கள்ளன் ஒன்றாகவும், மோ.விலக்ஸ்சனா தோணிக்காரன் ஒன்றாகவும், உ.வானுப்பிரியா தோணிக்காரன் இரண்டாகவும், சா.சோபிதா  மதிதீரனாகவும், ச.சசிகலா சன்னியாசியாகவும், செ.திருவரசி பறையறைவோனாகவும் அ.நவநிலன் கீர்த்தியசீலனாகவும், கள்ளன் இரண்டாகவும் பாத்திரமேற்று ஆடினர்.