மட்டக்களப்பு கல்லடி வேலூர் ஸ்ரீ பத்ர காளி அம்மன் தேவஸ்தானத்தின் மனித நேய செயற்பாடு -தாய்நாட்டில் இறுதிக்கிரியைக்காக காத்திருக்கும் 22 வயது இளைஞனின் உடல்…!

 

 




இன்னும் ரூ.6 இலட்சம் தேவை — மனிதநேய உள்ளங்கள் கரம் கொடுக்குமா?

குடும்பத்தின் வறுமையைப் போக்கி, தனது குடும்பத்தின் எதிர்காலத்தைச் சீரமைக்க வேண்டும் என்ற கனவுடன் கடந்த ஜூன் மாதம் 2ஆம் திகதி ஐரோப்பிய நாடு நோக்கிப் பயணித்த மட்டக்களப்பைச் சேர்ந்த 22 வயதான இளைஞன் யுவராஜா ஜூட்யுனிஷ்டன், பெலாரஸ் (Belarus) நாட்டு எல்லைப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வாழ்க்கையை வளமாக்க வேண்டும் என்ற கனவுடன் வெளிநாடு சென்ற மகனை இழந்து, துயரத்தின் உச்சத்தில் தவிக்கும் அவரது தாயார், தன் மகனின் உடலையாவது தாய்நாட்டிற்கு கொண்டு வந்து இறுதிக்கிரியைகளைச் செய்ய வேண்டும் என்ற ஒரே நம்பிக்கையுடன் கடந்த இரண்டு மாதங்களாக உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மனிதநேய உள்ளங்களின் உதவியை நாடி கண்ணீருடன் போராடி வருகின்றார்.

அந்நாட்டு அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி, இளைஞனின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. எனினும், அதற்குத் தேவையான தொகையை உடனடியாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மொத்தமாகத் தேவைப்படும் தொகை – ரூ.21,27,780
இதுவரை திரட்டப்பட்ட தொகை – சுமார் ரூ.15,00,000
(உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உதவியுடன்)

இன்னும் தேவைப்படும் நிலுவைத் தொகை – சுமார் ரூ.6,00,000

காலதாமதமின்றி எஞ்சிய தொகையைச் செலுத்தினால் மட்டுமே இளைஞனின் உடலை விரைவாக தாய்நாட்டிற்கு அனுப்பி வைக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த இக்கட்டான சூழ்நிலையை கருத்திற்கொண்டு, மட்டக்களப்பு கல்லடி வேலூர் ஸ்ரீ பத்ரகாளி அம்மன் தேவஸ்தானத்தினர், பெற்ற மகனை இழந்து தவிக்கும் தாயின் துயரத்தைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், இன்று கல்லடி வேலூரில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு நேரடியாகச் சென்று ரூ.50,000.00 நிதியுதவியை வழங்கி வைத்துள்ளனர்.

துயரத்தில் இருக்கும் ஒரு குடும்பத்திற்கு ஆறுதலாகவும், மனிதநேயத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ள இந்த உதவிச் செயற்பாடு, கல்லடி பெருநிலப்பரப்பில் அமைந்துள்ள ஏனைய ஆலயங்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறது.

மட்டக்களப்பு கல்லடி வேலூர் ஸ்ரீ பத்ரகாளி அம்மன் தேவஸ்தானத்தினர் இதுபோன்ற பல்வேறு மனிதநேயப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஒரு தாய் தனது மகனின் உடலைத் தாய்நாட்டிற்கு கொண்டு வந்து, தனது கைகளால் இறுதிக்கிரியைகளைச் செய்ய வேண்டும் என்ற இறுதி ஆசையுடன் காத்திருக்கின்றார்.

எனவே, கல்லடி, கல்லடி உப்போடை, நொச்சிமுனை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவரும் உள்ளூர் அறக்கட்டளை நிறுவனங்கள், சமூக அமைப்புகள், வர்த்தகர்கள், நலன்விரும்பிகள் மற்றும் மனிதநேய உள்ளங்கள் மௌனம் காக்காமல், தங்களால் இயன்ற உதவியை வழங்க முன்வருமாறு எமது ஊடக நிறுவனம் அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றது.

சிறிய தொகையாக இருந்தாலும் பரவாயில்லை.
உங்கள் உதவி, ஒரு தாயின் கண்ணீரைத் துடைக்கக் கூடியதாக இருக்கும்.
ஒரு மகனின் இறுதி பயணத்தை தாய்நாட்டை நோக்கி நகர்த்தக்கூடியதாக இருக்கும்.

உதவி வழங்க விரும்புவோர் — வங்கிக் கணக்கு விபரம்

கணக்கு உரிமையாளர்: Y. Vergini
கணக்கு இலக்கம்: 8909960
வங்கி: Bank of Ceylon (BOC)
கிளை: Kallady, Batticaloa

ஒரு குடும்பத்தின் துயரத்தில் நாம் அனைவரும் பங்கெடுப்போம்.
மட்டக்களப்பு மண்ணின் இளைஞனின் உடலை தாய்நாட்டிற்கு கொண்டு வர ஒன்றிணைந்து உதவுவோம்.