சிறைச்சாலை திணைக்களத்தின் பேண்ட் வாத்தியக் கலைஞர்களுக்கான 07 நாள் விசேட பயிற்சி முகாம், கடந்த 2026.08.07 முதல் 2026.08.13 வரை கொழும்பு – பணாகொட இராணுவ இசைப் பயிற்சிக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.
சிறைச்சாலை திணைக்களத்தின் பேண்ட் வாத்தியக் கலைஞர்களின் திறன்களை மேலும் மேம்படுத்தும் நோக்கில், சிறைச்சாலை திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்தப் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
நாட்டிலுள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் கடமையாற்றும் பேண்ட் வாத்தியக் கலைஞர்களில் மொத்தம் 30 உத்தியோகத்தர்கள் இப்பயிற்சி முகாமில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் விசேட அம்சமாக, மட்டக்களப்பிலிருந்து சிறைச்சாலை திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட ஒரேயொரு தமிழராக வேல்முருகு பிறேமதீபன் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுமார் 30 ஆண்டுகளாக சிறைச்சாலை திணைக்களத்தின் முக்கிய அங்கமாக இயங்கி வரும் பேண்ட் வாத்தியக் குழுவினர், சிறைச்சாலை திணைக்களத்தில் புதிய உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நிறைவடைந்து நடைபெறும் பிரியாவிடை நிகழ்வான (Passing Out) நிகழ்வுகளில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
அத்துடன், சிறைச்சாலை திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழக்கும் சந்தர்ப்பங்களிலும், அவருக்கான இறுதி மரியாதை நிகழ்வுகளில் திணைக்களத்தின் பேண்ட் வாத்தியக் குழுவினர் பங்கேற்று தமது இசை அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
இவ்வாறு சிறைச்சாலை திணைக்களத்தின் முக்கிய நிகழ்வுகளிலும் உத்தியோகபூர்வ நிகழ்ச்சிகளிலும் நீண்டகாலமாக பங்களித்து வரும் பேண்ட் வாத்தியக் கலைஞர்களின் திறமைகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இப்பயிற்சி முகாம், அவர்களின் தொழில்சார் திறன்களை மேம்படுத்துவதற்கான முக்கியமானதொரு முன்னெடுப்பாக அமைந்துள்ளது.
இப்பயிற்சி முகாமில் மட்டக்களப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஒரேயொரு தமிழராக வேல்முருகு பிறேமதீபன் பங்கேற்றமை மட்டக்களப்பு மக்களுக்கும் பெருமைக்குரிய விடயமாக அமைந்துள்ளது.



.jpeg)




