மட்டக்களப்பு கல்லடி உப்போடை நொச்சிமுனை பேச்சியம்மன் ஆலயம்.







 
கலாநிதி. கனகராஜா பிரேமகுமார்.

மட்டக்களப்பு கல்லடி உப்போடை, நொச்சிமுனையில் ஓலைக்குடிசையில் விரும்பி உறைந்து அடியார்க்கு அருள் பாலித்து, தனது அருட்கடாட்சத்தின் மூலம் விவேகானந்தா மகளிர் கல்லூரி, சிவானந்தா தேசிய பாடசாலை, இராமகிருஸ்ண மிசன் என்பவற்றை தோற்றம் பெற வைத்த அன்னை பேச்சிதாயார்.

எமது பிரதேசத்தை சார்ந்த நமது முன்னோர்கள் சின்னவரின் பெண் பிள்ளைகளான சின்னாத்தை,உமையாத்தை ஆகிய சகோதரிகளின் வளவினுள், மூன்று தேத்தா மரங்கள் முக்கோண வடிவில் நிற்பதை அவதானித்து,தற்போது பேச்சி அம்மன் ஆலயம் இருக்கும் தேத்தா மரத்தின் கீழ் பேச்சியையும்,வலப்புறமாக இருந்த தேத்தா மரத்தின் கீழ் காளியையும்,மேற்கு திசையாக இருந்த தேத்தா மரத்தின் கீழ் மாரியையும் வழிபட்டு வந்தனர்.1824 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வில்வை மரமொன்றின் கீழ் பிள்ளையார் கோயில் ஒன்றையும் சிறியதாக அமைத்து,சக்தி வழிபாட்டுடன் விநாயகர் வழிபாட்டையும் சேர்த்து வழிபடத் தொடங்கினர்.அன்னை பேச்சியம்மன் மீதும்,விநாயகர் பெருமாள் மீதும் அதிக பக்தி கொண்டவர்களான சின்னவர் சின்னாத்தை,உமையாத்தை சகோதரிகள் ஆலயங்களின் மேம்பாட்டிற்காக 1826 ஆம் ஆண்டு தங்களது சகோதரரான சின்னவர் கதிர்காமர் அவர்களுக்கு நிலத்தை கையளித்தனர்.அவர் தனது மகனான கந்தப்பெருமாள் அவர்களிடம் ஆலயங்களின் பொறுப்புகளை கையளித்து முகாமையாளராக நியமித்தார்.1884ஆம் ஆண்டு முகாமையாளர் பொறுப்பு அவர் மகனான கதிர்காமத்தம்பி உடையாரிடம் கையளிக்கப்பட்டது.
1912 ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போதைய விவேகானந்தா மகளிர் கல்லூரியின் ஆரம்ப கட்டிட பணிகளுக்காக மாரியம்மன் பந்தல் வைத்து வழிபட்டு வந்த தேத்தா மரம் வெட்டி அகற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.ஊர் மக்கள் இதற்கு எதிர்ப்பினை தெரிவித்த போதும், மக்களின் கல்வி தேவைக்காக அம் மரம் வெட்டப்பட்டது.
இச் சம்பவத்திற்கு பின் பெரும்பாலான ஊர் மக்களுக்கு அம்மை நோய் கண்டது.மக்கள் பயந்தவர்களாக அம்மனிடமே சரண்டைந்தனர்.கந்தப்பர் என்ற அம்மன் அடியவர் ஒருவர் இன்றைய பேச்சியம்மன்  ஆலயம் அமைந்திருக்கும் அதே தேத்தா மரத்தின் கீழ் வேப்பிலை கும்பம் ஒன்றை வைத்து,மக்களின் நோய்  நீங்க வேண்டுமென்று வழிபட்ட போது உருவர பெற்று தெய்வமாடி தன் வாக்கிலே,பேச்சியும் மாரியும் ஒன்றே,பேச்சி குடியிருக்கும் தேத்தா மரத்தடியிலேயே மாரியும் குடியிருக்கிறாள் ,மாரியை வணங்கியது போல் பேச்சியை வழிபாடு செய்யுங்கள் என்று கட்டு சொல்லியிருக்கிறார்.
இச் சம்பவம் மூலம் மனம்   தெளிந்த மக்கள் மாரியும்,காளியும்,பேச்சியும் ஒன்றுதான் என்றுணர்ந்து,பேச்சியை தங்கள் மனதிலே முழு முதலாக இருத்தி வழிபாடு செய்யத் தொடங்கினர்.அதன் பின் மக்களிடம் காணப்பட்ட அம்மை நோய் குறைந்து மறைந்து விட்டது.பேச்சியம்மன் மீது மாறாத ஆழ்ந்த பக்தி மக்கள் மத்தியில் ஏற்பட்டு பேச்சியம்மன் வழிபாடு மிக தீவிரமடைந்தது.
1917ஆம் ஆண்டு கதிர்காமத்தம்பி உடையார் அவர்கள் சிவபதம் அடைந்த பின் அவரது மகன் கதிர்காமத்தம்பி உடையார் வேலுப்பிள்ளை அவர்கள் முகாமையாளராக பொறுப்பேற்றார். இவர் செயற்பாடுகளை விரிவுபடுத்தினார்.மக்களுடைய வழிபாட்டுக்காக நிரந்தரமானதொரு அம்பாள் விக்கிரகம் பிரதிட்டை செய்யப்பட வேண்டும் என்பது அனைவரதும் விருப்பமாக இருந்தது.இதன் முக்கியம்,அவசியங்களை உணர்ந்து கொண்ட  தர்மகர்த்தா K. O..வேலுப்பிள்ளை அவர்கள் இந்தியாவிலிருந்து அம்மன் விக்கிரகத்தை கொண்டு வந்தார்.
இவ்விக்கிரகத்தை கல்லால் ஒரு ஆலயம் அமைத்து வைப்போம் என்று சிந்தித்த நிலையில் பலரது கனவில் தாயார் தோன்றி "எனக்கு கல்லால் ஆலயம் கட்ட முயற்சிக்க வேண்டாம் என்றும், ஓலைக்குடிசையிலேயே தன்னை வைக்க வேண்டும்" என்று கூறியதும், ஓலைக்குடிசையில் மாம்பழக் குருக்கள்  அவர்களால்    1925 காலப்பகுதியில் அம்பாள் சிலை ஸ்தாபிதம் செய்யப்பட்டது. இதன் பின்புதான் வருடாந்த சடங்குடன் வெள்ளிக்கிழமை பொங்கல் பூசைகள் மிக சிறப்பு பெற்றது.
1947 ஆம் ஆண்டு தர்மகர்த்தா K. O. வேலுப்பிள்ளை அவர்கள் நல்ல நோக்குடன், கல்லடி உப்போடை-நொச்சிமுனை மக்களின் கைகளில் ஐந்து குறிச்சிகளாக பிரித்து ஆலயங்களை ஒப்படைத்தார். அன்றிலிருந்து இன்று வரை இக் கிராம மக்கள் தங்கள் தாயாரின் ஆலயத்தை பெரும் பக்தியுடன் வணங்கி வருகின்றனர். பேசும் தெய்வமாக அன்னை இக் கிராமங்களை பாதுகாத்து வருகின்றார். தற்போது இவ்விரு கிராமங்கள் ஐந்து குறிச்சிகளாக பிரிக்கப்பட்டு, 25 அன்னையின் பிள்ளைகள் மகா சபையினரால் தெரிவு செய்யப்பட்டு நிர்வாக செயற்பாடுகள் மிக சிறப்பாக நடைபெற்று வருகின்றது. நிர்வாகத்திற்கு பக்க பலமாக முகாமையாளர் அவர்களும்,கிராம இளைய தலைமுறையினரும் பெரும் பங்களிப்பை நல்கி தங்களை அர்ப்பணித்து நிற்பது குறிப்பிடப்பட வேண்டியது.
ஆண்டு தோறும் ஆடி மாத அமாவாசையை அடுத்து வரும் ஞாயிறு;றுக்கிழமை இரவு கும்பம் வைத்தலுடன் சடங்கு உற்சவம் ஆரம்பமாகும். திங்கட்கிழமை சடங்குகள் அம்மன் அடியார்களால் செய்யப்படும். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய தினங்களில் இடம்பெறும் சடங்கு உற்சவங்கள் 5 குறிச்சிகளின் பொது மக்களால் விமர்சையாக அன்னைக்கு சடங்கு பூஜைகள் செய்யப்படும். இதில் செவ்வாயக்கிழமை கண்ணகி தாயாரிடம் செல்லும் வைபவமும், வெள்ளிக்கிழமை பலிச்சடங்கு  வைபவமும் இ;டம் பெறுவது குறிப்பிடத்தக்கது. ஞாயிறு, திங்கள் ஆகிய இரு தினங்கள் பொதுச்சடங்குகளாக இடம்பெறும். இதில் ஞாயிற்றுக்கிழமை மடிப்பிச்சை எடுத்தல்,நெல் குற்றுதல் என்பன மிக பய பக்தியுடன் அடியார்களால் செய்யப்படும். திங்கட்கிழமை அன்னை பேச்சிக்கு பள்ளய வைபவமும் திருக்கும்பம் சொரிதல் வைபவமும் பக்தி உணர்வு பூர்வமாக இடம் பெற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்னையின் ஆசி பெற்று செல்வார்கள். புதன் கிழமை வைரவர்  பூஜையுடன் உற்சவம் நிறைவு பெறும். இக்கால கட்டம் கல்லடி உப்போடை நொச்சிமுனை கிராமங்கள் ஆன்மீக மணம் நிறைந்ததாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
அன்னை பேச்சித்தாயார் தனது குழந்தைகளின் கல்வி பொருளாதார மேம்பாட்டிற்காக தனது அருட்கடாட்ச்சத்தின் மூலம் 1909 ஆம் ஆண்டு கதிர்காமத்தம்பி உடையார் சபாபதி பிள்ளை உடையார் ஆகியோர் மூலம் தற்போதைய விவேகானந்தா மகளிர் கல்லூரியை ஸ்தாபிக்க வைத்தாள். 1925 ஆம் ஆண்டு தர்மகர்த்தா மூலம் சுவாமி விபுலானந்தரை அன்னையின் வளாகத்திற்கு அழைத்து தனது குடிசைக்கு முன்பாக  சிவானந்தா தேசிய பாடசாலை ஆரம்பக்கட்டத்தை தர்மகர்த்தா மூலம் அமைக்க வைத்து சுவாமி விபுலானந்தருக்கு 1928 ஆம் ஆண்டு தனது வளாகத்தில் வைத்து கையளிக்க வைத்தாள். நாட்டின் பல கிராமங்களில் கல்விமான்கள் உருவாக அன்னையின் ஆசி உறுதுணையாக நின்றதை நாம் என்றும் மனதில் வைக்கப்பட வேண்டியது. இச்சம்பவங்கள் மூலம் 1929 ஆம் ஆண்டு ஆன்மீக வழிகாட்டலுக்கு தனது பிரதேசத்தில் இராமகிருஷ்ண மிஷனை தனது குடிசைக்கு முன்பாகவே தோற்றம் பெற வைத்து, இராமகிருஷ்ண மிஷன் துறவிகளின் வருகைக்கும், ஆசிக்கும், அவர்களின் தன்னலமற்ற சேவைக்கும்  வித்திட்டாள். எங்கள் பேச்சித்தாயாரின் கருணையையும் சிறப்பையும் வார்த்தைகளுக்குள் உள்ளடக்க முடியாது. இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் அன்னையின் குழந்தைகள் அவளது காலடிக்கு வந்து அருளாசி பெற்று செல்வது கண்கொள்ளா காட்சியாகும்.
20.09.2024  அன்று நமது தாயார் அக்கினியாக காட்சி தந்தது அடியார்களின் மனதில் மாறாத ஒரு சம்பவமாக பதிந்து நிற்கின்றது.  
நமது எதிர்கால சந்ததியினர் அன்னை பேச்சித்தாயாரின் சரித்திரத்தையும் அற்புதத்தையும் அறிந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கில் இக்கட்டுரை அன்னையின் ஆசியுடன் வெளியிடப்படுகின்றது.  . .