
பொதுமக்களின் நீண்டகால கோரிக்கைக்கு தீர்வு – சுகாதாரமான சூழலில் மீன் விற்பனைக்கு வசதி
வவுணதீவு பகுதியில் பொதுமக்களின் நீண்டகால தேவையை கருத்திற்கொண்டு, புதிய மீன் சந்தை ஒன்றை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நேற்று (14.08.2026) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மண்முனை மேற்கு பிரதேச சபையினால் Performance Grant – 2026 திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் “Construction of Fish Market at Vavunathivu” வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு, இத்திட்டத்தின் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
வவுணதீவு பகுதியில் மீன் விற்பனை மற்றும் கொள்வனவில் ஈடுபடும் மக்களுக்கு முறையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், சுகாதாரமான சூழலில் மீன் விற்பனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் இந்த புதிய மீன் சந்தை வழிவகுக்கும்.
மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள், மீன் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்த ஒரு தேவையாகவே இந்த மீன் சந்தை அமைப்புத் திட்டம் அமைந்துள்ளது. இதன் மூலம் வவுணதீவு பகுதியில் மீன் விற்பனை நடவடிக்கைகள் மேலும் ஒழுங்குபடுத்தப்பட்டு, மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கக்கூடிய சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் மேம்பாட்டு நிதித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த அபிவிருத்திப் பணியானது, வவுணதீவு மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றை நிறைவேற்றும் முக்கியமான திட்டமாகும்.
இந்தப் பணிகள் சிறந்த முறையில் நிறைவு செய்யப்பட்டு, விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும். வவுணதீவு பகுதி மீனவர்கள், மீன் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த புதிய வசதியை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் கௌரவ த.கோபாலபிள்ளை, உபதவிசாளர் கௌரவ டிசாந், சபையின் கௌரவ உறுப்பினர்கள், திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.













