இலங்கை நில அளவை திணைக்களத்தின் 226வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மட்டக்களப்பு பிரதேச நில அளவை அலுவலகத்தில் சிறப்பு இரத்த தான முகாம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நில அளவை திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் நில அளவை திணைக்கள உத்தியோகத்தர்களின் நலன்புரிச் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த இரத்த தான முகாம் கடந்த 2026.08.18 செவ்வாய்க்கிழமை அன்று கல்லடி, சரவண வீதியில் அமைந்துள்ள பிரதேச நில அளவை அலுவலகதில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் அவசர இரத்தத் தேவையை நிவர்த்தி செய்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் பொறுப்பு வைத்தியர் டாக்டர் சஞ்சிதா தலைமையில் வருகை தந்த தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் குருதிச் சேகரிப்பு நடவடிக்கைகளைத் திறம்பட மேற்கொண்டனர்.
உயிர்காக்கும் இந்த உன்னதமான சமூகப் பணியில் நில அளவை திணைக்கள அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் நலம் விரும்பிகள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டு ஆர்வத்துடன் இரத்த தானம் வழங்கினர்.
அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இரத்தத் தட்டுப்பாட்டினால் ஏற்படும் ஆபத்துகளைக் உணர்ந்து, பொதுமக்களையும் இளைஞர்களையும் ஒருங்கிணைத்து இவ்வாறான நற்பணியை ஒருங்கிணைத்த நில அளவை திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் நலன்புரிச் சங்கத்தினரின் இச்சேவை ஏனைய அமைப்புகளுக்குச் சிறந்த முன்மாதிரியாக அமைந்துள்ளது.
தன்னார்வத்துடன் முன்வந்து குருதிக்கொடை அளித்த கொடையாளர்களுக்கும், முகாமினைச் சிறப்பாக நடத்தி முடித்த மருத்துவக் குழுவினருக்கும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தமது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.






























