செய்தி ஆசிரியர்
மட்டக்களப்பு மண்ணில் குழந்தை நல மருத்துவத் துறையில் சிறப்பா ன சேவையாற்றி, எளிய மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் பெற்றவர் வைத்தியர் விஷ்ணுகுமார் சிவபாதம் (Dr. Vishnu Sivapatham).
மருத்துவத்தை வெறுமனே ஒரு தொழிலாகக் கருதாமல், மனிதநேயத்துடன் கூடிய சேவையாகக் கருதி பணியாற்றிய அவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் குழந்தை நல மருத்துவ நிபுணராகவும், கிழக்குப் பல்கலைக்கழக சுகாதாரப் பராமரிப்பு அறிவியல் பீடத்தில் குழந்தை மருத்துவத் துறையின் விரிவுரையாளராகவும் தனது அறிவையும் அனுபவத்தையும் அர்ப்பணித்தவர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் MBBS பட்டம் பெற்ற அவர், குழந்தை நல மருத்துவத்தில் DCH தகுதியையும் பெற்றுள்ளார். தனது மருத்துவப் பயணத்தில் கொழும்பு சொய்சா பெண்கள் வைத்தியசாலை, கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை உள்ளிட்ட முன்னணி வைத்தியசாலைகளில் பணியாற்றி பரந்த அனுபவத்தைப் பெற்றுள்ளார்.
குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதிலும் அவர் தொடர்ந்து அக்கறை செலுத்தி வந்துள்ளார். குறிப்பாக, குழந்தைகளுக்கு எவ்
வாறு ஆரோக்கியமான உணவுகளை வழங்குவது, பொதுவான நோய்களிலிருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள சுகாதார வழிகாட்டல்களை சமூக ஊடகங்கள் ஊடாகவும் பகிர்ந்து வந்தார்.
மருத்துவப் பணிக்கு அப்பால், சமூக நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டிருந்த அவர், பல்வேறு சமூக நிகழ்வுகளில் பங்கேற்று மக்களுடன் நெருக்கமாகப் பயணித்தார். அவரது எளிமையான அணுகுமுறை, அன்பான பேச்சு, அர்ப்பணிப்பான சேவை ஆகியவை அவரை மட்டக்களப்பு மக்களின் மனதில் தனித்துவமான இடத்தைப் பெறச் செய்தன.
மருத்துவச் சேவையிலும், சமூக அக்கறையிலும் அவர் ஆற்றிய பங்களிப்புக்கு நிகரான ஒரு மருத்துவரை மட்டக்களப்பு மண்ணில் காண்பது மிகவும் அரிது என்பதே மறுக்க முடியாத உண்மை.
இவ்வாறான ஒரு சிறந்த மருத்துவ நிபுணர் மட்டக்களப்பை விட்டு விலகிச் செல்வது, ஒரு வைத்தியசாலைக்கோ அல்லது கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கோ ஏற்பட்ட இழப்பு மாத்திரமல்ல. அது மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கும், அகில இலங்கை மருத்துவத் துறைக்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பு என்பதை காலம் அனைவருக்குமே உணர்த்தும் .
மக்களின் நோய்களை மட்டுமல்ல… அவர்களின் வலிகளையும் புரிந்துகொண்ட ஒரு மனிதநேய மருத்துவராக வைத்தியர் விஷ்ணுகுமார் சிவபாதம் அவர்கள் மட்டக்களப்பு மக்களின் மனதில் என்றும் நிலைத்திருப்பார்.










