மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம்-2026

 







 சின்னக் கதிர்காமம் என அழைக்கப்படும் மட்டக்களப்பு மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம்
கடந்த 08.08.2026 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில், மட்டக்களப்பு வாவியின் மேற்குக் கரையில் அமைந்துள்ள மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம், வரலாற்றுச் சிறப்புமிக்க பழம்பெரும் முருகன் திருத்தலமாகும்.

 “தில்லை மண்டூர்”, “சின்னக் கதிர்காமம்” என்ற சிறப்புப் பெயர்களால் போற்றப்படும் இத்தலம், கதிர்காம ஆலயத்தைப் போன்ற வழிபாட்டு மரபுகளைப் பின்பற்றி இன்று வரை தனது தனித்துவத்தைப் பாதுகாத்து வருகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் கந்தசுவாமி ஆலயம் இலங்கையின் தொன்மை வாய்ந்த முருகத் திருத்தலங்களில் ஒன்றாகவும், “சின்னக் கதிர்காமம்” என்றும் அழைக்கப்படும் சிறப்புமிக்க தலமாகவும் விளங்குகிறது. இது மட்டக்களப்பு வாவியை ஒட்டி அமைந்துள்ளது. 

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வரலாறு
மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தோற்றம் குறித்து வரலாற்றுச் செய்திகளும், கர்ணபரம்பரைக் கதைகளும், “மட்டக்களப்பு மான்மியம்” போன்ற மரபு நூல்களில் காணப்படும் ஐதீகங்களும் கூறப்படுகின்றன.

 ஆலயம் கந்தபுராணக் கால வரலாற்றுடன் தொடர்புடையது என்றும், அதன் தொன்மை மிகவும் பழமையானது என்றும் மரபுவழியாகக் கருதப்படுகிறது. 

சில மரபுச் செய்திகள் இதனை கி.மு. 1800-க்கும் முற்பட்ட காலத்துடன் தொடர்புபடுத்துகின்றன.

வேலுடன் தொடர்புடைய ஐதீகம்
மண்டூர் ஆலயத்தின் மிக முக்கியமான தலபுராணக் கதை முருகப்பெருமானின் வேலுடன் தொடர்புடையது.

சூரபத்மனை அழிக்க முருகப்பெருமான் மேற்கொண்ட போரின்போது வீசிய வேல் பல கூறுகளாகப் பிரிந்து இலங்கையின் பல பகுதிகளில் தங்கியதாகக் கர்ணபரம்பரைக் கதைகள் கூறுகின்றன. அவற்றில் ஒரு வேல் கதிர்காமத்திலும் மற்றொரு வேல் மண்டூரிலும் தங்கியது என்பது மண்டூர் தலத்தின் முக்கிய ஐதீகமாகும்.

மற்றொரு தலபுராண மரபின்படி, சூரபத்மனை வதம் செய்த பின்னர் முருகப்பெருமான் தனது வேலால் வாகூர மலையைப் பிளந்தபோது வெளிப்பட்ட ஒளிக்கதிர்களில் ஒன்று மண்டூரை அடைந்து தில்லை மரங்களுக்குள் நிலைகொண்டதாக கூறப்படுகிறது.

 அங்கு வாழ்ந்த வேடர்கள் அந்தத் தெய்வீகச் சின்னத்தை வழிபடத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனாலேயே “தில்லை மண்டூர்” என்ற பெயரும் ஏற்பட்டதாக மரபு விளக்கம் உள்ளது. 


“சின்னக் கதிர்காமம்” ஏன்?

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வழிபாட்டு முறைகளில் பல கதிர்காம முருகன் ஆலயத்தை ஒத்த தன்மைகள் காணப்படுகின்றன. ஆகம முறை சாராத, பழமையான மரபு வழிபாட்டு முறைகளும் இங்கு முக்கியத்துவம் பெற்றுள்ளன.

 இதனால் மண்டூர் “சின்னக் கதிர்காமம்” என்று பக்தர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறது.


ஆலயம் மட்டக்களப்பின் பாரம்பரிய திருப்படைக் கோயில்களில் ஒன்றாகவும் குறிப்பிடப்படுகிறது.

ஆலய அமைப்பு
கிடைக்கின்ற மரபுச் செய்திகளின்படி, ஆலயத்தின் அமைப்பு கதிர்காமத்தை ஒத்ததாகக் கூறப்படுகிறது. வெளிப்பிரகாரத்தில் வள்ளி, தெய்வயானை ஆகியோருக்கான சிற்றாலயங்களுடன், பிள்ளையார் மற்றும் நாகதம்பிரான் சந்நிதிகளும் காணப்படுகின்றன.

 சில ஆதாரங்கள் தற்போதுள்ள ஆலயக் கட்டமைப்பை கி.பி. 1215–1248 காலப்பகுதியுடன் தொடர்புபடுத்துகின்றன.

போர்த்துக்கேயர் காலத்துடன் தொடர்புடைய கதை
மண்டூர் ஆலயத்தை அழிப்பதற்காக போர்த்துக்கேயப் படையினர் முயன்றபோது, அவர்களை குளவிப்படை தாக்கி விரட்டியதாக ஒரு பிரபலமான தலவரலாற்றுக் கதை நிலவுகிறது. இந்தச் சம்பவம் ஆலயத்தின் தெய்வீகப் பாதுகாப்பை எடுத்துக்காட்டும் ஐதீகமாக இன்றும் பக்தர்களிடையே சொல்லப்படுகிறது.

தனித்துவமான வழிபாட்டு மரபு
மண்டூர் ஆலயத்தில் நடைபெறும் திருவிழா மற்றும் பூஜை முறைகள் பழைமையான தமிழர் வழிபாட்டு மரபுகளுடன் நெருங்கிய தொடர்புடையவை. கடந்த காலத்தில் தீ மிதித்தல் போன்ற நேர்த்திக் கடன்களும் இடம்பெற்றதாகப் பதிவுகள் குறிப்பிடுகின்றன.

 
இன்றும் இத்தலத்தில் உருவ வழிபாடு இல்லாமல், திரைசேலைக்கு பின்னால் மௌன முறையில் பூஜைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்க சிறப்பாகும்.

ஆண்டுதோறும் ஆடி/ஆவணி மாதங்களில் நடைபெறும் 21 நாள் மகோற்சவம்,  ஆயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் பக்தி பரவசமாக நடைபெற்று வருகிறது. 

தீர்த்தோற்சவம் எதிர்வரும் 28 ஆம் திகதி காலை இடம்பெறும்.

வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா