

செய்தி ஆசிரியர்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் அவசர இரத்தத் தேவையை நிவர்த்தி செய்யும் முதன்மை நோக்குடன், கல்வி ஊக்குவிப்பு ஒன்றியத்தின் அனுசரணையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று (22.08.2026) இரத்ததான நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் பொறுப்பு வைத்தியர் டாக்டர் சஞ்சிதா தலைமையில் வருகை தந்த தாதியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் குருதிச் சேகரிப்பு நடவடிக்கைகளைத் திறம்பட மேற்கொண்டனர்.
இந்நிகழ்வுக்கு வருகை தந்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் R. முரளீஸ்வரன் அவர்கள், உயிர்காக்கும் இச்சமூகப் பணியைப் பாராட்டித் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இரத்தத் தட்டுப்பாட்டினால் ஏற்படும் ஆபத்துகளை உணர்ந்து நடத்தப்பட்ட இம்முகாமில், கல்வி ஊக்குவிப்பு ஒன்றியத்தின் அங்கத்தவர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் மற்றும் நலம் விரும்பிகள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டு ஆர்வத்துடன் குருதிக்கொடை வழங்கினர்.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையையும் இளைஞர்களையும், இரத்த கொடையாளிகளையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்பட்ட இச்சேவை ஏனைய அமைப்புகளுக்குச் சிறந்த முன்மாதிரியாக அமைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும், குருதிக்கொடை அளித்த கொடையாளர்களுக்கும் மருத்துவக் குழுவினருக்கும் தமது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
































