து. கௌரீஸ்வரன்,
தொன்மைமிகு தமிழர்தம் வரலாற்றில் ஏழு தலைமுறைகளுக்கான பெயர்கள் சுட்டப்படுகின்றன.
இதில் பின்நோக்கிப் பார்க்கும் போது ஏழாவதாகத் தெரியும் தலைமுறையினரை 'பரன்','பரை' என்று கூறுகின்றோம்.
இந்தத் தொன்மையான பெயரிலிருந்தே ‘பரையர்’ என்ற சொல் வந்ததாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
இத்தோடு, தொன்மைமிகு தமிழர்கள் கண்டறிந்து கட்டுருவாக்கிய முதலாவது தோல் வாத்தியம் ‘பறை’ என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஈழத்தில் தமிழர்களிடையே உள்ள பறையிசைக் கருவியின் தோற்றத்தை முதற்குடிகளான வேடர்களின் 'கொட்டு' வாத்தியத்தின் பரிணாமமாகவே நாம் காண்கின்றோம்.
இவ்வாறு தொன்மைமிகு தமிழ்ப்பண்பாட்டின் அடையாளமான பறை வாத்தியமும், அதைப் பயின்று பரிணமித்த தொல்தமிழ்க் குடியினரும் தமிழர்தம் வரலாற்றில் இடையில் வந்து ஆதிக்கஞ் செய்யத் தொடங்கிய பார்ப்பனிய ஆதிக்கக் கருத்தியலால் ஒடுக்குமுறைகளுக்குள்ளாகி வரும் நிலையில்,
இத்தகைய சமூக ஏற்றத்தாழ்வுகள் மிகுந்துள்ள அடக்குமுறைகளுக்குள்ளிருந்து தமிழர்தம் பண்பாடுகளைச் சமத்துவத் தன்மைகளுடன் மீட்டெடுக்கும் செயற்பாடுகள் தமிழ்கூறும் நல்லுலகமெங்கும் நடைபெற்று வருகின்றன.
இந்தவகையில், ஈழத்தின் கிழக்கிலும் பறையிசையினைக் காத்திரமாக முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடந்தேறி வருகின்றன.
இதன் ஓரம்சமாக இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையில் நாடகமும் அரங்கியலும் பாடத்தில் சிறப்புக் கற்கையின் இறுதியாண்டில் கற்கும் லவக்குமார் லாவணியா என்ற மாணவி தனது இறுதியாண்டு ஆய்வளிக்கையாக பறையிசைப்பதில் ஆர்வமான இளைஞர்களைச் சேர்த்து அவர்களுக்கு மூத்த பறையிசைக் கலைஞரான திரு பேரின்பம் ஊடாகப் பயிற்சிகளை வழங்கி அதில் ஓர் ஆற்றுகையாளராகத் தானும் பயின்று தனது ஆய்வளிக்கையினைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 14.08.2026 ஆந் திகதி செய்திருந்தார்.
இந்த ஆய்வுச் செயற்பாட்டின் மேற்பார்வையாளராக பேராசிரியர் சி. ஜெயசங்கர் பணியாற்றுகின்றார்.
ஆய்வுகள் காகிதங்களுக்குள் மட்டும் அமிழ்ந்து போகாமல் அவை சமூகங்களின் இயக்கத்தில் காத்திரமான மாற்றங்களைக் கண்முன்னே காட்டும் செயற்பாடுகளாக அமைய வேண்டும் என்ற கருத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ள “மங்கலப்பறையிசை” என்னும் இவ்வாய்வளிக்கை கவனிப்பிற்குரிய ஒன்றாக இருக்கின்றது.
மங்கலப்பறையிசை ஆற்றுகையின் ஒரு சிறு பதிவு இதில் உள்ளது.

.jpeg)

.jpeg)





