கிழக்கில் தொடரும் காட்டு யானைகளில் அட்டகாசம் .

 


சம்மாந்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராமப் பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், அவை பயிர்களுக்கும் குடியிருப்புகளுக்கும் பலத்த சேதங்களை விளைவித்து வருகின்றன.

யானைகளினால் சேதப்படுத்தப்பட்ட பகுதிகளை சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹீர் மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஐ.எல்.எம். ஹனீபா ஆகியோர் சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இரவு வேளைகளில் கூட்டம் கூட்டமாக ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள், வயல் நிலங்களை அண்மித்த குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.

கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் செந்நெல் கிராமம் மற்றும் உடங்கா கிராமக் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து வரும் காட்டு யானைகள், வீட்டுத் தோட்டங்கள், வீட்டு மதில்கள் மற்றும் பயன்தரும் வாழை, தென்னை மரங்களை முற்றாக நாசம் செய்துள்ளன.

மக்களின் உடைமைகள் மற்றும் வாழ்வாதாரப் பயிர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வரும் இந்த யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.