அக்கரைப்பற்று உள்ளிட்ட பகுதிகளில் நீர் விநியோகத் தடை ஏற்படலாம்!
( வி.ரி.சகாதேவராஜா)
தற்போது
நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீரேந்து பகுதிகள் மற்றும் குளங்களின்
நீர்மட்டம் கணிசமாகக் குறைவடைந்து வருவதால், அக்கரைப்பற்று உள்ளிட்ட பல
பகுதிகளில் நீர் விநியோகத்தில் தடங்கல்கள் ஏற்படக்கூடும் என தேசிய நீர்
வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
தேசிய
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அக்கரைப்பற்று முகாமையாளர்
(O&M) அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவித்தலிலேயே
இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக
அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஒலுவில்–பாலமுனை, இறக்காமம், திருக்கோவில்,
பொத்துவில், நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை
மற்றும் மத்திய முகாம் ஆகிய பகுதிகளுக்குரிய நீர் வழங்கல் திட்டக்
காரியாலயங்களின் கீழ் நீர் விநியோகத்தில் தடங்கல்கள் ஏற்படுவதற்கான
சாத்தியம் காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே,
இந்நிலைமை வழமைக்குத் திரும்பும் வரை, பொதுமக்கள் தங்களது தேவைக்கேற்ப
போதுமான அளவு நீரைச் சேமித்து வைத்துக்கொள்வதுடன், நீரைச் சிக்கனமாகப்
பயன்படுத்துமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை
கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும்,
நீர் விநியோகத்தில் ஏற்படும் அசௌகரியங்களுக்கு பொதுமக்களின்
புரிந்துணர்வையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாகவும் சபை
தெரிவித்துள்ளது.





