பிரபல தனியார் வகுப்பு உரிமையாளர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

 


ஹொரனை பகுதியில் உள்ள பிரபல தனியார் வகுப்பு உரிமையாளர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரனை, நார்தனகலை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து சுமார் 15 கிராம் 250 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கைபேசி, சிம் கார்ட் மற்றும் போதைப்பொருளை அளவிடப் பயன்படுத்தப்பட்ட மின்னணு தராசு என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர் ஹொரனை பகுதியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நார்தனகலையில் உள்ள சந்தேகநபரின் வீட்டிற்கு பொலிஸார் சென்ற போது, அவர் தப்பிச் செல்ல முயன்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் மீது இதற்கு முன்னரும் போதைப்பொருள் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவரைத் தடுப்புக் காவலில் எடுத்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணி வந்தாரா, போதைப்பொருள் விநியோக வலையமைப்பை நடத்தினாரா அல்லது தனது வகுப்புகளுக்கு வரும் மாணவர்களுக்கு போதைப்பொருள் வழங்கி வந்தாரா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.