ஹிருணிகாவின் சிறைத்தண்டனைக்கு எதிரான மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதியை நிர்ணயித்துள்ளது.

 


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனைக்கு எதிராக அவரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான திகதியை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

அதற்கமைய, இந்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 06ஆம் திகதி நடத்துவதற்கு இன்று (06) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு தெமட்டகொட பகுதியில் உள்ள கடையொன்றில் பணிபுரிந்த இளைஞர் ஒருவரைக் கடத்திச் சென்று, தாக்கி, சட்டவிரோதமாக சிறைபிடித்த குற்றச்சாட்டில் ஹிருணிகா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

 இந்த நிலையில் இதற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் அவருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையிலிருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி ஹிருணிகா பிரேமச்சந்திரவினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதேவேளை குறித்த மனுவை ஓகஸ்ட் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு  உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.