இலங்கையில் அரசியல்வாதிகளின் ஆயுட்காலத்தை விட மருத்துவர்களின் ஆயுட்காலம் குறைவாக காணப்படுகிறதா ?

  

 




இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் மருத்துவர்களின் ஆயுட்காலம் சாதாரண தொழில் வல்லுநர்களின் ஆயுட்காலத்தை விடக் குறைவாக உள்ளதாக இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வொன்று உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இலங்கையின் பிரதான அரசியல்வாதிகளின் ஆயுட்காலம் பெரும்பாலும் 65 வயதைத் தாண்டியே காணப்படுவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்து தசாப்தங்களாக நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய முக்கிய அரசியல்வாதிகள் குறித்து நடத்தப்பட்ட சமூக ஆய்வின்படி, 65 சதவீதத்திற்கும் அதிகமான அரசியல்வாதிகள் 65 வயதுக்கு மேலும், 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் 75 வயதுக்கு மேலும் வாழ்கின்றனர். அத்துடன், 80 வயதைத் தாண்டி வாழும் அரசியல்வாதிகள் 5 சதவீதத்தை நெருங்கியுள்ளனர்.

அரசியல்வாதிகளுக்குக் கிடைக்கும் உயர் மட்ட மருத்துவ வசதிகள், நாடாளுமன்ற மருத்துவக் காப்புறுதி மூலம் தனியார் மற்றும் வெளிநாட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் வரப்பிரசாதங்கள், நிதி நெருக்கடிகள் மற்றும் மன அழுத்தம் இல்லாத சொகுசு வாழ்க்கை முறை ஆகியவையே இவர்களின் நீண்ட ஆயுளுக்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சாதாரண மக்களுக்கு இருக்கும் கடன் சுமை, வரிச்சுமை, கல்வி மற்றும் சுகாதாரச் சுமைகள் இவர்களுக்கு இல்லாததும், அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் நேரத்தைக் கழிப்பதும் இதற்குப் பிரதான காரணங்களாகும்.

இந்த சமூக ஆய்வு குறித்த மேலதிக ஆய்வுகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அடுத்த 6 மாதங்களுக்குள் இது தொடர்பான விரிவான அறிக்கை சர்வதேச அளவில் வெளியிடப்படும் என்றும் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ மேலும் குறிப்பிட்டுள்ளார்.