கிழக்கு மாகாணத்தின் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த எதிர்கால வளர்ச்சி சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயும் நோக்கில், ஆசிய நாடுகளின் தூதுவர்கள் வெள்ளிக்கிழமை (10) மட்டக்களப்பு மாநகர சபைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
மியன்மார், மலேசியா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய ஐந்து நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் இந்த முக்கிய சந்திப்பில் கலந்துகொண்டனர். மட்டக்களப்பு பொது நூலக மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், வருகை தந்த தூதுவர்களுக்கு மாலை அணிவித்து அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலின் போது, கிழக்கு மாகாணத்தின் வாழ்வாதார மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக தத்தமது நாடுகளின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து தூதுவர்கள் விரிவாக விளக்கமளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்கள், அவற்றின் தற்போதைய நிலை மற்றும் அங்கு அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள் குறித்து மாநகர சபை தரப்பிலிருந்து தெளிவுபடுத்தப்பட்டது. அத்துடன், மாநகர சபையின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் நிர்வாகக் கட்டமைப்பு குறித்தும் தூதுவர்களுடனான சந்திப்பில் எடுத்துரைக்கப்பட்டது.
மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுலாத்துறையை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கும், புதிய வேலைத்திட்டங்களை உருவாக்குவதற்கும் தேவையான நிதியுதவிகள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை வழங்குமாறு இதன்போது மாநகர சபை முதல்வரினால் தூதுவர்களிடம் உத்தியோகபூர்வ கோரிக்கை விடுக்கப்பட்டது.
சுமுகமாக நடைபெற்ற இந்த இருதரப்புப் பேச்சுகளின் நிறைவாக, ஐந்து நாட்டு தூதுவர்களுக்கும் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன. மேலும், மட்டக்களப்பின் தனித்துவமான அபிவிருத்தி இலக்குகளை உள்ளடக்கிய பிரத்யேக திட்ட முன்மொழிவு அறிக்கைகளும் (Proposals) ஒவ்வொரு தூதுவரிடமும் தனித்தனியாக கையளிக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த உயர்மட்டக் கலந்துரையாடலில், மாநகர சபை ஆணையாளர் என். தனஞ்செயன், மாநகர சபை உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எனப் பலரும் முன்னிலை வகித்திருந்தனர்.




