தமிழர்களின் இதயமாகக் கருதப்படும் யாழ். பொது நூலகத்தைத் தீக்கிரையாக்கிய பாவிகள் ஐக்கிய தேசியக் கட்சியினரே என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
1983 கறுப்பு ஜூலை கலவரத்தில் மலையக மக்களையும் ஐக்கிய தேசியக் கட்சியினரே நாசமாக்கினார்கள் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கறுப்பு ஜூலை கலவரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் உரையாற்றுகையில், "1983 ஆம் ஆண்டில் நுவரெலியாவை எரித்துச் சாம்பலாக்கியது யார்? ஐக்கிய தேசியக் கட்சியினரே எமது மக்களை நாசமாக்கினார்கள்.
பதுளையில் தமிழர்களின் கடைகளுக்கு முன்னால் இராணுவத்தினர் கோடு போட்டனர். அதன் பின்னரே வந்த ஐ.தே.க காடையர்கள் கடைகளை எரித்து நாசமாக்கினார்கள். பச்சிளம் குழந்தைகளைக் கூட இந்தப் பாவிகள் தீயிலிட்டுக் கொளுத்தினார்கள்.
தோட்டத் தொழிலாளர்களைச் சீரழித்தவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியினர்தான். அவர்கள் அவசரகாலச் சட்டத்தையும், கொடூரமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் கொண்டுவந்தார்கள்.





