நாமல் ராஜபக்ஷ திருமணவீட்டு மின்கட்டணம் 2,682,246.57 ரூபா, எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது .

 


கடந்த 2019 ஆம் ஆண்டு வீரக்கெட்டியவில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் நடைபெற்ற, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண விழாவிற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணத்தைச் செலுத்தத் தவறியமையினூடாக பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (24) உத்தரவிட்டது.

இம்மனு ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோரைக் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு  முன்னிலையில்  நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது முன்வைக்கப்பட்ட  விடயங்களை பரிசீலித்த நீதியரசர்கள் அமர்வு, இலங்கை மின்சார சபை தற்போது மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், அதற்குரிய அங்கத்துவ நிறுவனத்தை இம்மனுவின் பிரதிவாதியாகப் பெயரிடுவதுக்கு மனுதாரர் தரப்புக்கு அனுமதி வழங்கியதுடன், மனுவை டிசம்பர் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் திகதி குறித்தது.

சட்டத்தரணி விஜித குமாரவினால் தாக்கல் செய்யப்பட்ட இம்மனுவில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண விழா 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை வீரக்கெட்டியவிலுள்ள வீட்டில் நடைபெற்றதாகவும், அதற்காகப் பெறப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணம் 2,682,246.57 ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.