மட்டக்களப்பு கல்லடி வேலூரில் கசிப்பு விற்பனையை நிறுத்தக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று பொது மக்களால் முன்னெடுக்கப்பட்டது .































(கல்லடி செய்தியாளர்)

 மட்டக்களப்பு கல்லடி வேலூர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் கசிப்பு விற்பனையை நிறுத்தக் கோரி அப்பிரதேச மக்கள் வெள்ளிக்கிழமை (29) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் ஈடுபட்டோர் கல்லடி வேலூர் கிராமசேவகர் அலுவலகத்துக்கு முன்னால் ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி கல்லடி மணிக்கூட்டுக் கோபுரம் வரை சென்று  மணிக்கூட்டுக் கோபுரத்தடியில் "எடுக்க வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும்", நிறுத்து நிறுத்து வடியை நிறுத்து" போன்ற கோசங்களை வெளியிட்டனர்.

இதன்போது பெருமளவான பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் கலந்து கொண்டு  "சாந்தி விற்பனை நிலையம், தேவி விற்பனை நிலையம் ஒழிக!", வேண்டாம் வேண்டாம் உயிர்க் கொல்லி வடிசாராயம் வேண்டாம்", "வடிசாராயம் விற்கும் அராஜக பெண்ணுக்கு சட்ட நடவடிக்கை இல்லையா?", "அரச அதிகாரிகளே எமது கிராமத்தில் கசிப்பு விற்பனையை முற்றாகத் தடை செய்" போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளைத் தாங்கிச் சென்றனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்லடி வேலூர் கிராம சேவகர், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருடன் உரையாடினர். அத்தோடு காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரிடம் ஒருவார காலத்துக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.  இந்நிலையில் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கல்லடி மதுவரித் திணைக்கள அதிகாரியிடம் ஒப்படைத்தமை குறிப்பிடத்தக்கது.