இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட முதலாவது முட்டைத் தொகுதி, பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டது .

 


 

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட முதலாவது முட்டைத் தொகுதி, பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன, வியாழக்கிழமை (30) தெரிவித்தார்.

தலா 35 ரூபாய் என்ற விலையில் 10 இலட்சம் முட்டைகளை அரச வர்த்தக கூட்டுத்தாபனம், பேக்கரி
உரிமையாளர்களுக்கு வழங்கியதாகவும் நாட்டின் அரச நிறுவனத்தின் அங்கிகாரத்துடன்
கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மார்ச் 18ஆம் திகதி உற்பத்தித் திகதி இடப்பட்டுள்ள முட்டைகளில் காலாவதித் திகதி 2023ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் திகதி நிறைவடைவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

எதிர்காலத்தில் இலங்கையில் உள்ள பேக்கரிகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு முட்டைகளை இறக்குமதி செய்யவுள்ளதாக தெரிவித்த ஜயவர்தன, எதிர்காலத்தில் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையின் முட்டை உற்பத்தியாளர்களும் இப்போது போட்டி விலையில் முட்டைகளை விற்பனை செய்ய ஆரம்பிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டிய அவர், நுகர்வோருக்காகச் செயற்பட்ட வர்த்தக அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 20 இலட்சம் முட்டைகளும் கடந்த  23 ஆம் திகதி
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த நிலையில்,  கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் புதன்கிழமை (29) அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.