மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா - 2023




மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் எதிர் வருகின்ற தமிழ் சித்திரைப்புத்தாண்டனை முன்னிட்டு சித்திரைப்புத்தாண்டு பாரம்பரிய கலாசார விளையாட்டு விழா நடத்துவதற்கான விசேட கலந்துரையாடல் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில்  மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் மற்றும்  மேலதிக அரசாங்க அதிபர்(காணி) திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன்  ஆகிய இருவரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வை நடத்துவதற்காக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் அவர்களின் மேற்பார்வையின் கீழ் இராணுவம், பொலிஸ், மாநகர சபை, லயன்ஸ் கழகம்,  சமூக அமைப்புக்கள், கலாசார பிரிவு, ஊடகப்பிரிவு, மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளடக்கப்பட்ட செயற்பாட்டுக்குழு தெரிவு செய்யப்பட்டது.

இதன்போது மரதன் ஓட்டம், மெல்ல சைக்கிலோட்டம், போத்தலில் நீர் நிரப்புதல், தேசிக்காய் சமநிலை, கோலம், ஊசிக்கு நூல்போடுதல், சாக்கோட்டம், யானைக்கு கண் வைத்தல், ஓலை பின்னுதல், தேங்காய்துருவுதல், கயிறு  இழத்தல், தலையனைச்சமர், கிராமிய பாடல், மிட்டாய் ஓட்டம், சங்கீத கதிரை, வழுக்கு மரம், பலூன் ஊதி உடைத்தல் போன்ற போட்டிகளை உத்தியோகத்தர்களுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளனர்.

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் எதிர்வரும் மாதம் நடத்துவதாக தீர்மானித்துள்ளதுடன் பாரம்பரிய விளையாட்டுக்களான கிட்டியடித்தல், சுரக்காய் விளையாட்டு, கொத்திருக்கு கொத்து, தெத்திக்கோடு போன்ற விளையாட்டுக்களுடன், றபான் அடித்தல், பல்லாங்குழி, வட்டக்காவடி, கண்ணம் பூச்சி போன்ற விளையாட்டுக்களும் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலில் இராணுவ உயர் அதிகாரிகள், பொலிஸ் திணைக்கள உயரதிகாரிகள் உள்ளிட்ட மேலும் பல துறை சார் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.